`இது நியாயம் தானா?'- மத்திய, மாநில அரசுகளுக்கு சரத்குமார் `குட்டு'

நடிகர் சரத்குமார்
நடிகர் சரத்குமார்

தமிழக அரசு, சொத்துவரியை உயர்த்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பட்டம் நடத்தினர். ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை பாஜக கூட்டணியில் இருப்பதால் அதிமுக கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில் சொத்து வரியை உயர்த்தியிருப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டணம் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையிலேயே மத்திய அரசின் விலையேற்றத்தையும் அவர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை - பணக்காரன் என்ற பாகுபாடின்றி கரோனாவால் ஏற்கெனவே அனைத்து தரப்பு மக்களின் தொழிலும், வணிகமும் பாதிக்கப்பட்டதில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவையும், விளைவுகளையும் சீர்செய்ய ஒவ்வொரு குடும்பமும் கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்வடைந்துள்ளது. இந்த சமயத்தில் தற்போது சொத்து வரியை உயர்த்தியுள்ளதால் மக்கள் மேலும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதில், சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவித்தது பேரதிர்ச்சியாக உள்ளது. ஒன்றிய அரசின் 15-வது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையிலும், விலைவாசி உயர்வு, பணியாளர்களின்‌ ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும்‌ மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான பணிகளுக்காக சொத்து வரி உயர்த்தப்படுவதாக, தமிழக அரசு தெரிவிக்கிறது.

அரசின் வருவாய்க்கும், செலவின தேவைகளுக்கும் அரசு வரியை உயர்த்துகிறது, அரசு விதிக்கும் வரியை மக்கள் தவறாமல் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என்றாலும், மக்களின் வருவாய்க்கும், செலவின தேவைகளுக்கும், பொருளாதார மீட்டெடுப்பிற்கும் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை அவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அழுத்தம் கொடுப்பது நியாயமற்றது. சாமானிய மக்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல், ஒரே சமயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் வெவ்வேறு காரணங்களுக்காக விலையை உயர்த்தி கொண்டே இருப்பது எந்த விதத்தில் நியாயம்? மத்தளம் போல மக்களை இருபுறமும் அடித்து காயப்படுத்தாமல், அவர்களின் நிலையை உணர்ந்து வேலைவாய்ப்பு, பொருளாதார மீட்டெடுப்பு, வாழ்க்கைத்தர உயர்வுக்கு உதவி செய்துவிட்டு, பின்னர் வரியை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கலாமே தவிர, தற்போது உயர்த்தியது மக்கள் மீது மேலும் சுமையை திணிப்பதாகும்.தமிழக அரசு அதிகப்படியான சொத்துவரியைக் குறைக்கவேண்டும்.”எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in