
தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திமுகவின் 15- வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. அக்டோபர் 9-ம் தேதி திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. முன்னதாக, பல்வேறு மட்டங்களிலும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
திமுகவின் 72 மாவட்ட கழகங்களில் தென்காசி வடக்கு தவிர்த்து 71 மாவட்டங்களுக்கான மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் திமுக தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டது.
வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகளை உள்ளடக்கிய தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு திமுகவில் பலத்த போட்டி நிலவியது. இந்த பதவி எம்.பியான தனுஷ்குமாருக்கு வழங்க உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை அறிவாலயத்தில் ஒரு கோஷ்டியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், சங்கரன் கோவில் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ராஜா, தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.