இப்போதுதான் இந்துக்களின் கண்களை திறந்திருக்கிறார் உதயநிதி! - எச்.ராஜா பேட்டி

எச்.ராஜா
எச்.ராஜா

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி, "சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக்கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்றார்.

உதயநிதியின் இந்தப் பேச்சு தான் இப்போது அகில இந்திய அரசியலையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

பாஜக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்காவிட்டால், உதயநிதியின் பேச்சை அங்கு கூடியிருந்தவர்கள் மட்டும்தான் கேட்டிருப்பார்கள். ஆனால், இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கும் விதமாகப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கொந்தளித்தனர்.

பாஜகவின் மத்திய அமைச்சர்கள், “சனாதனம் குறித்து பேசுபவர்களின் நாக்கை வெட்ட வேண்டும்... கண்ணை நோண்ட வேண்டும்” என்றெல்லாம் வரம்பு மீறினார்கள். தமிழக பாஜகவும் உதயநிதியைக் கண்டித்து போராட்டம் நடத்தியது. இந்த நிலையில் சனாதன சர்ச்சைகள் தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவிடம் பேசினோம். இனி அவரது பேட்டி...

எச்.ராஜா
எச்.ராஜா

சனாதன சர்ச்சையை ஊதிப் பெரிதாக்கியதன் மூலம் உதயநிதிக்கு அரசியல் விளம்பரம் தேடிக்கொடுத்துவிட்டதோ பாஜக..?

உதயநிதிக்கு விளம்பரம் தேடிக்கொடுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்... திராவிடம் என்பது சித்தாந்தம்; சனாதனம் என்பது மனிதர்கள். 80 சதவீத மக்களைக் கொல்லுவேன் என ஒருவர் கூறினால் நாங்கள் சும்மா இருப்போமா? அதுவும் யாரை கொல்லுவேன் எனக் கூறினாரோ அவர்களும் இவருக்கு ஓட்டுப்போட்டிருக்கிறார்கள் தானே.

இன்னொரு விஷயம்... யாரோ ஒருவர் பேசினார் என எப்படிக் கடந்து போக முடியும்? அவர் அமைச்சர்; அதுவும் முதலமைச்சரின் மகன் பொறுப்பாகப் பேச வேண்டாமா? அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பதை மறந்துவிட்டுப் பேசினால் அதனைப் பாஜக நினைவுபடுத்தும்.

நியாயமாகப் பார்த்தால் உதயநிதி பேச்சுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்துக்களும் கொந்தளித்திருக்க வேண்டும் ஆனால், இந்த திராவிடக் கூட்டங்கள் அவர்களின் மூளையை மழுங்கடித்து வைத்துள்ளது. இதுவே கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் குறித்து பேசிவிட்டு உதயநிதி வெளியில் நடமாட முடியுமா? நிச்சயம் முடியாது. இந்துக்கள்தான் இவர்களுக்கு இளைத்தவர்கள்.

கருத்துக்குப் பின்வாங்க மாட்டேன் எனக் கொசுவர்த்திச் சுருள் எல்லாம் போட்டிருக்கிறாரே உதயநிதி..?

அவர் பின்வாங்க வேண்டாம். வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் தக்கபாடம் புகட்டிய பின்பு அவர் தானாகவே பின் வாங்குவார். நான் என்ன கேட்கிறேன்... அவர் அம்மாவும் சனாதனத்தைதானே பின்பற்றுகிறார். அவர் மலேரியாவா? டெங்குவா? எதுன்னு சொல்வாரா உதயநிதி. அவரை எந்தக் கொசுவர்த்தி வெச்சு ஒழிப்பார்ன்னு சொல்லச் சொல்லுங்க.

இவர்கள் பெரியாரை தூக்கிவைத்து கொண்டாடிக்கொண்டு இந்துக்களை இழிவாகப் பேசினால் நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன? அது ஒருக்காலும் எச்.ராஜா போன்றவர்கள் இருக்கும் வரை நடக்காது.

சனாதன இந்து தர்மத்தை இழிவுபடுத்துகிற கும்பல் வேரோடும், வேரடி மண்ணோடும் களையப்பட வேண்டும். இதனைப் பாஜக மட்டும் சொல்லவில்லை... ஆந்திர முதல்வர், மம்தா பானர்ஜி , கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களே உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பவாதிகள் கூட்டணி சேர்ந்தாலும் உருப்படாது. இனியாவது உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து திருந்த வேண்டும். இல்லையென்றால் உண்மையான இந்துக்களால் அவர் திருத்தப்படுவார்.

எச். ராஜா
எச். ராஜா

அதற்காக, பாஜக ஆட்சிக்கு வந்தால் காக்கிச் சட்டையைக் காவி சட்டையாக மாற்றுவோம் என்றெல்லாம் நீங்கள் சொல்வது சரிதானா?

ஆமாம் ஸார் சொல்லமாட்டேனா..? இனப்படுகொலை செய்வதாக ஒருத்தர் பேசியிருக்கார். அவரைக் கைதுசெய்ய இவங்களுக்குத் துப்பு இல்லை. நாங்க போராட்டம் நடத்தினா, மைக் போடக் கூடாது; ஸ்டேஜ் போடாக் கூடாதுன்னு திராவிடக் கூட்டங்களுக்கு ஆதரவா வந்து நின்னா, அப்படித்தான் சொல்ல முடியும். காக்கிச் சட்டை போட்டிருக்கோம் என்கிற கூச்சநாச்சம் வேணாமா? நிச்சயமாக பாஜக இந்தத் திராவிடர் கூட்டத்தை அழிக்கும். அப்படி அழித்து நாங்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காக்கி காவியாக மாறும் என்பதே உண்மை.

பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை..?

மலேரியா, டெங்கு போன்று அழித்துவிடுவேன் என்று இந்துவை இனப்படுகொலை செய்வேன் என உதயநிதி சொன்னதை வீடுவீடாகப் பிரச்சாரம் செய்வோம். அழிக்கப்பட வேண்டிய கும்பல் இந்தத் திராவிட இயக்கங்கள். இவர்கள் இந்துக்களுக்கு எதிராக எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள் என மக்களிடம் கொண்டு செல்வோம்.

இவ்வளவு நாளாக மக்கள் இவர்களைக் கண்மூடித்தனமாக நம்பிவிட்டார்கள் இப்போதுதான் இந்துக்களின் கண்களை உதயநிதி திறந்துள்ளார். அதனால் உண்மையான இந்துக்கள் யாரும் திமுகவினருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதை எடுத்துரைப்போம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மக்களவைத் தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு முடிவுக் கட்டுவார்கள் என்கிறாரே தமிழக முதல்வர்..?

மக்கள் நிச்சயம் முடிவுகட்டுவார்கள். அது பாஜகவுக்கு அல்ல; திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தான். ஊழல்வாதிகளின் கூடாரமாக விளங்கும் திமுகவுக்கு நிச்சயம் முடிவுகட்டுவார்கள். மோடி மக்களுக்காக பல நல்ல திட்டங்களைத் தீட்டி மக்களுக்காகவே வாழும் மகான். ஆனால், ஸ்டாலின் தன் மகனுக்காகவும், தன் குடும்பத்துக்காகவும் வாழ்பவர்.

ஊழலின் ஊற்றுக்கண் திமுக என்பது மக்களுக்கு நன்கு தெரியும். கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் என்ன நடக்கிறது எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள். அதனால் 3-வது முறையாக மோடி பிரதமராவது உறுதி.

அமலாக்கத்துறை மற்றும் வருமானத்துறை நடவடிக்கைகள் மூலம் திமுகவை உங்கள் பக்கம் இழுக்கப்பார்ப்பதாக ஒரு பேச்சு இருக்கிறதே?

உப்புத் தின்னவன் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும். கோடி கோடியாக் கொள்ளையடித்து நாட்டைக் குட்டிச்சுவராக்கிய இந்தக் கும்பலை ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அமலாக்கத்துறை, வருமானத்துறை எல்லாம் தன்னிச்சையான அமைப்புகள் அதனை நாங்கள் இயக்கவேண்டிய அவசியமில்லை.

அவர்களுக்குக் கிடைத்த ஆதாரத்தின்படி நடவடிக்கை எடுக்கிறார்கள். அதற்காக இவர்கள் ஏன் பதற வேண்டும்? இன்னொரு விஷயம்... திமுகவை எங்கள் பக்கம் இழுக்க வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது.

சனாதன சர்ச்சையில் அதிமுக உங்களை ஆதரிப்பது போல் தெரியவில்லையே..?

அவர்கள் எங்கள் கூட்டணி கட்சி. எங்களுக்கெனத் தனித்துவம் இருக்கிறது; அதில் நாங்கள் பயணிக்கிறோம். எல்லாம் கணவன் - மனைவி உறவுப் போலத்தான். தேர்தல் வந்ததும் இணக்கமாகி விடும். மற்றபடி எங்கள் எல்லோருடைய இலக்கும் திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in