பாஜகவிலிருந்து சமாஜ்வாதிக்குச் சென்ற சுவாமி பிரசாத் மவுரியாவுக்குப் பின்னடைவு!

பாஜகவிலிருந்து சமாஜ்வாதிக்குச் சென்ற சுவாமி பிரசாத் மவுரியாவுக்குப் பின்னடைவு!

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குச் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சமாஜ்வாதி கட்சி, எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிகளைச் சுவைக்காது என்றே இப்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பாஜகவிலிருந்து சமாஜ்வாதிக்குத் தாவிய சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் பின்னடைவு கவனிக்கத்தக்கது. ஃபாஸில்நகர் தொகுதியில் போட்டியிட்ட சுவாமி பிரசாத் மவுரியா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் குமார் குஷ்வாஹாவைவிட 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார்.

யோகி ஆதித்யநாத அமைச்சரவையில் தொழிலாளர், வேலைவாய்ப்பு மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து, 2017-ல் பாஜகவுக்குத் தாவியதும் இதேபோல் தேர்தல் காலகட்டத்தில்தான்.

அரசியலில் சாதி, மத அடையாளங்கள் பெரும் பங்கு வகிக்கும் மாநிலமான உத்தர பிரதேசத்தில், ஓபிசி தலைவர்களில் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவிலிருந்து சமாஜ்வாதி கட்சிக்குத் தாவியது பரபரப்பாகப் பேசப்பட்டது. அவரது மகள் சங்கமித்ரா மவுரியா பாஜக எம்.பி ஆவர். தனது மகன் அசோக்குக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதற்குக் கட்சித் தலைமை மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்த அவர், இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின்னர் முதல்வர் யார் என முடிவுசெய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். யோகியுடன் இப்படி மோதிக்கொண்டிருந்தவர், ஜனவரி மாதம் பாஜகவிலிருந்து விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில், சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். அவருடன் 3 அமைச்சர்கள், 6 எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சிக்குத் தாவியது பாஜகவினருக்கு அதிர்ச்சியளித்தது. அவர் வெளியேறியது ஓபிசி வாக்காளர்கள் மத்தியில் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் ஊகங்கள் எழுந்தன.

எனினும், யோகியை விமர்சித்து வெளியில் வந்த சுவாமி பிரசாத மவுரியா இந்தத் தேர்தலில் பின்னடைவைத்தான் சந்தித்திருக்கிறார். தோற்பது உறுதி என்றே சொல்லலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in