முலாயம் சிங் யாதவ் காலமானார்: உத்தரபிரதேசத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர்

முலாயம் சிங் யாதவ் காலமானார்: உத்தரபிரதேசத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர்

உத்தரப்பிரதேசத்தில் மூன்று முறை மாநில முதல்வராகவும், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றிய சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் காலமானார்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ்(82) இன்று காலை 8.16 மணியளவில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 22 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாதவ், உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அக்டோபர் 2 ம் தேதி ஐசியுவிற்கு மாற்றப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ், மூன்று முறை மாநிலத்தின் முதல்வராகவும், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 10 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஏழு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். சமாஜ்வாதி கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்களால் "நேதாஜி" என்று பிரபலமாக குறிப்பிடப்படும் இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

முன்னாள் மல்யுத்த வீரரான இவர், தனது 28 வயதில் 1967ல் ஜஸ்வந்நகர் தொகுதி எம்.எல்.ஏ ஆனார். அதன்பின்னர் 1989 - 1991, 1993-95, 2003 - 2007 ஆகிய காலகட்டங்களில் உத்தரபிரதேச முதல்வராக இருந்துள்ளார். 1996ல் ஐக்கிய முன்னணி அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். 2012ல் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, முலாயம் சிங் யாதவ் தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in