சிறையிலிருந்து போட்டியிடும் சமாஜ்வாதி வேட்பாளர் நாஹீத்!

மதக்கலவர வழக்கில் கைதானவரின் வேட்புமனு ஏற்பு
சமாஜ்வாதி  வேட்பாளர் நாஹீத் ஹசன்
சமாஜ்வாதி வேட்பாளர் நாஹீத் ஹசன்

உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு தேர்தலிலும் சிறையிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது. கடந்த 2017 தேர்தலில் காஜிபூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முக்தார் அன்சாரி சிறையிலிருந்து போட்டியிட்டு வென்றிருந்தார். உபியின் குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் பட்டியலில் உள்ள முக்தார், தற்போதும் சிறையில் உள்ளார். இந்தமுறை மதக்கலவர வழக்கில் கைதான சமாஜ்வாதியின் கைரானா வேட்பாளர் நாஹீத் ஹசன் சிறையிலிருந்து போட்டியிடுகிறார்.

உபியின் மேற்குப்பகுதியில் ஷாம்லி மாவட்டத்திலுள்ளது கைரானா. மதக்கலவரப் பகுதிகளின் பட்டியலில் இடம்பெற்ற இந்த தொகுதி, முசாபர்நகர் மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ளது. கைரானாவில், இந்தமுறை தேர்தல் வித்தியாசமாக நடைபெற உள்ளது. சமாஜ்வாதி எம்எல்ஏவான நாஹீத் ஹசனுக்கு அவரது கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்திருந்தார்.

பாஜக வேட்பாளர் மிருகங்கா சிங்
பாஜக வேட்பாளர் மிருகங்கா சிங்

தனது வேட்புமனு தாக்கலுக்கு பின் நாஹீத்தை மதக்கலவர வழக்குகளில் ஷாம்லி போலீஸார் கைது செய்தனர். இதனால், தனது வேட்பு மனு நிராகரிக்கப்படும் என அஞ்சிய நாஹீத், தன் சகோதரியான இக்ரா ஹசனை சுயேச்சையாக மனுத் தாக்கல் செய்ய வைத்திருந்தார். லண்டனில் முதுகலை பட்டம் பெற்ற இக்ரா, தனது சகோதரரின் மனு நிராகரிக்கப்பட்டால், சமாஜ்வாதி சார்பில் போட்டியிடத் தயாராக இருந்தார்.

இந்நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனையில் நேற்று நாஹீத்தின் மனு ஏற்கப்பட்டது. இதனால், கைதாகி சிறையிலுள்ள நாஹீத் ஹசன், சமாஜ்வாதியின் சிறைப்பறவையாகப் போட்டியிட உள்ளார். இதனால், நாஹீத்தின் சகோதரியான இக்ரா தனது சுயேச்சை மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். எனவே, இந்த தேர்தலில் வேட்பாளர் இல்லாமலே சமாஜ்வாதி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியதாகி விட்டது.

இவரை எதிர்த்து பாஜகவில் மிருகங்காசிங் போட்டியிடுகிறார். பாஜகவின் முன்னாள் எம்எல்ஏவான ஹுக்கும்சிங்கின் மகளான மிருகங்கா, கடந்த தேர்தலிலும் நாஹீத்தை எதிர்த்து தோல்வியுற்றவர். பிறகு தனது தந்தை மறைவால் காலியான மக்களவை இடைதேர்தலிலும் மிருங்கா, சமாஜ்வாதி வேட்பாளர் தபஸ்யும் ஹசனிடம் தோல்வி அடைந்திருந்தார். இந்த தேர்தலில் மிருங்கங்காவை எப்படியும் வெல்ல வைப்பது என பாஜகவின் தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா இருதினங்களுக்கு முன் கைரானாவிலிருந்து தனது நேரடிப் பிரச்சாரத்தை துவக்கி இருந்தார்.

ஹுக்கும் சிங்
ஹுக்கும் சிங்

கைரானா மீது பாஜகவின் கவனம் ஏன்?

முஸ்லீம்கள் பெருமளவில் வாழும் கைரானாவில் இந்து குடும்பங்கள் வெளியேற்றப்படுவதாக புகார் எழும்பி இருந்தது. கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் இதுவரையிலும் கைரானாவிலிருந்து வெளியேறிய 346 இந்து குடும்பங்கள் என ஒரு புள்ளிவிவரம் வெளியானது. இதை அத்தொகுதியில் ஏழுமுறை எம்எல்ஏவாக இருந்த ராணுவ வீரரான 76 வயது ஹுக்கும்சிங் வெளியிட்டிருந்தார்.

பிறகு, கைரானாவிலிருந்து வெளியேறிய குடும்பங்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தங்கள் சொந்த பிரச்சினைகளால் வெளியேறியதாகத் தெரியவந்தது. எனினும், இப்பிரச்சினையை ஆக்ரா உள்ளிட்ட உபியின் மற்ற நகரங்களிலும் பாஜகவின் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத்தினரும் எழுப்பினர். பிறகு அடங்கிப்போன இந்த விவகாரம் கைரானாவின் தேர்தலில் மீண்டும் கிளப்பப்படுவதாகப் புகார் கிளம்பியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in