
’’மக்களின் சொத்தை தனியாருக்கு விற்பது என்பது, போகிற போக்கில் நாட்டையே தனியாருக்கு விற்று விடலாம் போல இருக்கிறது. மிகப்பெரிய மாற்று வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது கூடாது’’ என தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானம் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதை கண்டித்து கடந்த வாரம் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளரும், முன்னாள் தமிழ் பேராசிரியரும், தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையா, மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தனது கையெழுத்தை பதிவு செய்துள்ளார்.
இது குறித்த வீடியோவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி பகிர்ந்துள்ளார். அதில் தனது கையெழுத்தை பதிவு செய்து, தமிழறிஞர் சாலமன் பாப்பையா கூறுகையில், "மதுரை ரயில்வே மைதானத்தில் சில நேரங்களில் எங்கள் பிள்ளைகள் சென்று விளையாடுவார்கள். என்னால் அங்கு போக முடியவில்லை என்றாலும், தற்போது முதியவர்கள் பலரும் காலை வேளையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருவதை நான் பார்க்கிறேன்.
இது மக்களுடைய சொத்தாக இருக்கிறது. இந்த சொத்தைத் தனியாருக்கு விற்பது என்பது, போகிற போக்கில் நாட்டையே தனியாருக்கு விற்று விடலாம் போல இருக்கிறது. மிகப்பெரிய மாற்று வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இது கூடாது. என்றைக்கும் போலவே மக்கள் அங்கு சென்று ஓடவும், விளையாடவும், நடக்கவும் மைதானம் இருக்க வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!
மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!