26 பெண்களிடம் ரூ.24 லட்சம் மோசடி: விசிகவில் இருந்து பெண் நிர்வாகி அதிரடியாக நீக்கம்!

காயத்ரி
காயத்ரி
Updated on
1 min read

அரசு வேலை, கடனுதவி வாங்கித் தருவதாக 26 பெண்களிடம் ரூ. 24 லட்சம் மோசடி செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி காயத்ரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சேலம் பச்சைப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி காயத்ரி (42). இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேலம் மாநகர துணைச் செயலாளராக இருந்தார் இவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சமூகநலத்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருவதாகச் சொல்லி, பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி லட்சக்கணக்கில் சுருட்டியதாக புகார் எழுந்தார்.

இந்நிலையில், தொளசம்பட்டி அருகே உள்ள மொச்சைக்காட்டைச் சேர்ந்த மஞ்சுளா (32) என்பவர், காயத்ரி உள்ளிட்ட சிலர் மீது சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், 'விசிக கட்சி நிர்வாகி காயத்ரி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தாட்கோ திட்டத்தில் மானிய உதவியுடன் கடன் பெற்றுத் தருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். அதை நம்பிய நான், எனக்குத் தெரிந்த பெண்களிடம் 24 லட்சம் ரூபாயை வசூலித்து காயத்ரியிடம் கொடுத்தேன்.

ஆனால் அவர் சொன்னபடி மானியக் கடனும், அரசு வேலையும் வாங்கித் தரவில்லை. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்தபோது அவர் சமூகநலத்துறை அதிகாரி இல்லை என்பதும் தெரிய வந்தது. அவர் மோசடியானவர் என்பதை அறிந்து, அவரிடம் நாங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்டோம். அதில் 10 லட்ச ரூபாயைத் திருப்பித் தந்து விட்டார். மீதம் 14 லட்சம் ரூபாயை தராமல் இழுத்தடித்து வந்தார். இதுகுறித்து கேட்டால் ஆட்களை வைத்து மிரட்டல் விடுத்தார்,' என்று புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காயத்ரியின் உறவினர் லெனின், தோழியான அழகாபுரத்தைச் சேர்ந்த சாவித்திரி, உறவினர் இளமாறன் ஆகியோரையும் கைது செய்தனர். இதையடுத்து காயத்ரி தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சென்னையில் அக்.20-ம் தேதி காயத்ரி மற்றும் கார் ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

காயத்ரியிடமிருந்து சொசுகு கார், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மத்திய குற்றப்பிரிவில் மட்டும் காயத்ரி மீது 6 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கோவையிலும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட காயத்ரியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில, காயத்ரி உள்ளிட்ட மூன்று பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில் காயத்ரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in