ஆணையருக்கு எதிராக ட்விட்; தலைமையிடம் வாங்கிக் கட்டிய எம்பி: சேலம் திமுகவில் நடப்பது என்ன?

பார்த்திபன் எம். பி
பார்த்திபன் எம். பி

மாநகராட்சி நிகழ்ச்சிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாகவும், தன்னை அழைக்கக்கூடாது என அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அந்த பதிவை தற்போது நீக்கி உள்ளார். அதற்கு பதிலாக சேலம் ஆணையர் சிறப்பாக செயல்பட கூடியவர் என்று புதிதாக அவர் பதிவிட்டுள்ளார்

திமுகவைச் சேர்ந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். "சுயமரியாதை என் உயிருக்கு மேலானது‌. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது. அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால், அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்.

ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத்தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி. மக்கள் பணிகளை செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி கமிஷனர் நான் ஏதோ எதிர்க்கட்சி எம்.பி என்று நினைக்கிறார் போலும். மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்" என்று தனது பதிவில் குற்றம்சாட்டியிருந்தார்.

அவரின் அந்த கோபத்திற்கு சேலம் மாநகராட்சியில் நடைபெற்ற ஒரு விழாதான் காரணம். சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, இகொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாநகராட்சி ஆணையர் கிருஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. 994 நிரந்தர தூய்மைப் பணியாளர்களும், 1166 சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்களும் என மொத்தமாக 2160 வேட்டி, சேலை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மேயர், துணை மேயர் மற்றும் திமுக எம்எல்ஏ உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆனால் இதற்கு சேலம் திமுக எம்பியான எஸ்.ஆர்.பார்த்திபன் அழைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்று மாநகராட்சியில் நடைபெறும் பல விழாக்களுக்கு எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் சேலம் கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ராஜேந்திரன் தான் அதற்கு காரணம் என்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையேயுள்ள உட்கட்சி மோதலால் மாநகராட்சி அதிகாரிகளையும், மேயரையும் தன் பக்கம் ஆதரவாக வைத்துக்கொண்டு எம்பிக்கு அவர் அழைப்பு விடுக்கவில்லையாம்.

இந்த நிலைமை தொடர்வதை அடுத்தே ஆவேசமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி ஒரு பதிவை நேற்று பதிவிட்டிருந்தார். இதற்கு தலைமையிடம் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படி பொதுவெளியில் பிரச்சினைகளை வெளிப்படுத்துவது சரியில்லை என்று தலைமை எச்சரித்ததை தொடர்ந்து அந்த பதிவை உடனடியாக அவர் நீக்கியிருக்கிறார்.

அத்துடன் தான் குறை சொன்ன சேலம் மாநகராட்சி ஆணையரை புகழ்ந்தும் அவர் பதிவிட்டுள்ளார். "சேலம் மாநகராட்சி ஆணையர் சிறப்பாக செயல்பட கூடியவர். அனைவரின் நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பது தான். முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் சிறப்பாக செயல்படுவோம்" என்று பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in