சேலம் மாநாடு; ஒரு கை பார்த்த பல கைகள்!

சேலம் மாநாடு; ஒரு கை பார்த்த பல கைகள்!

சேலத்தில் திமுக இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு அண்மையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பல்வேறு தலைப்புகளில் பேசி உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தினார்கள்.

‘தமிழ்நாட்டின் கல்வி புரட்சி’ என்ற தலைப்பில் பேசிய தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ‘‘இந்தியா கூட்டணியை வழிநடத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வரலாறு படைப்பார். இந்தியா கூட்டணியில் முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ, அவர்தான் அடுத்த முதல்வர் (பிரதமர் தான் டங்க் ஸ்லிப்பாகி முதல்வராகி விட்டது!). ஆனால், முதல்வர் ஸ்டாலினை பிரதமராக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த இந்தியாவும் கைகாட்டுகிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் என்ற பார்வை நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்கம் திரும்பியுள்ளது. அப்படி பிரதமர் வாய்ப்புக் கிடைத்தால் தட்டிக்கழிக்க வேண்டாம். அதையும் ஒரு கை பார்ப்போம்’’ என்று பேசப் பேச, தொண்டர்கள் ஆரவார கோஷம் எழுப்பினர்.

சேலம் மாநாட்டு வெற்றிக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதள பதிவில், ‘‘எல்லோருக்கும் எல்லாம் எனும் திராவிட மாடல் தத்துவம் இந்திய ஒன்றியம் முழுவதும் பரவும் வகையில் அயராது உழைக்க இளைஞர் அணி மாநாடு எல்லோருக்கும் உத்வேகம் தந்திருக்கிறது. மத அரசியலா... அல்லது மனித அரசியலா? மனு நீதியா... அல்லது சமூக நீதியா?, மாநில உரிமையா... அல்லது பாசிச அடக்குமுறையா? என ஒரு கை பார்த்துவிடுவோம்’’ என்று பதிவிட்டிருந்தார்.

‘கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும்தான் ஒரு கை பார்க்க வேண்டுமா... நாம பார்க்க மாட்டோமா...’ என்று தொண்டர்கள் நினைத்தார்களோ என்னவோ, மாநாட்டு பந்தலைவிட சாப்பாட்டுப் பந்தல் அதிகம் களைகட்டியது.

காலையில் கருப்பட்டி கேசரியில் தொடங்கி, முடக்கத்தான் தோசை, சிகப்பரிசி இட்லி, மதியம் பனீர் பிரியாணி, சாம்பார் சாதம், பேபி கார்ன் 65, கதம்ப சாம்பார், தக்காளி ரசம், மோர் குழம்பு, வாழைப்பூ வடை, மட்டன் பிரியாணி, சிக்கன் 65, எண்ணெய் கத்தரிக்காய் தொக்கு, பிரட் அல்வா, ஐஸ்கிரீம், பழம், பீடா... என்று உத்வேகத்துடன் ஒருகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கைமணக்க வாய்மணக்க சாப்பிட்டது போதாதென்று சிலர், சமைத்தது போக மிஞ்சி இருந்த அரிசி, பருப்பு ஐட்டங்களையும் ஒரு கை பார்த்தார்கள்.

ரசித்து ரம்மி விளையாட்டு...
ரசித்து ரம்மி விளையாட்டு...

இதேபோல், நிர்வாகிகள் மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்க, பின் வரிசைகளில் ஜமக்காளத்தை விரித்துப் போட்டு “வாடா மாப்ள ஒரு கை போடலாம்” என பல கைகள் ரம்மியை ரசித்து விளையாடிக் கொண்டிருந்தன.

இதனால் முக்கிய தலைவர்களின் நரம்புபுடைத்த உரைகளில் நாற்காலிகள் மட்டுமே லயித்துக் கிடந்தன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in