சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவும்: தமிழக அரசை வலியுறுத்தும் ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா
ஜவாஹிருல்லா

``2019-ம் ஆண்டு செப்டம்பருக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்துமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில், `தமிழகத்தில் அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளி மற்றும் சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.  கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக அரசு வெளியிட்ட அரசாணை எண் 165 தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் தர இயலாத நிலை உள்ளதாக தமிழக முதல்வர், கிறிஸ்துமஸ் விழாவில் தெரிவித்துள்ளார்.

உண்மையில் கடந்த 17.9.2019 அன்று வெளியிட்ட அரசாணை எண் 165 தொடர்பான வழக்கு மட்டுமே உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அரசாணை எண் 165 வெளியானதற்கு முன்பு அதாவது 17.9.2019க்கு முன்பு அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் உதவி பெறும் பள்ளி மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசின் சார்பில் இன்றுவரை பணி நியமனத்திற்காக ஒப்புதல் வழங்கப்படாமல் அவர்களுக்கு அரசு ஊதியமும் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, 17.9.2019க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தை அங்கீகரித்து, மாதந்தோறும் ஊதியம் வழங்குவதோடு, அவர்களுக்கு நிலுவையில் உள்ள மூன்றாண்டு ஊதியத்தையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in