ஆய்வுக்கு வந்த இடத்தில் 10 கிலோ மீட்டர் ஓட்டம்!- ஆச்சரியமூட்டிய அமைச்சர்கள்

ஆய்வுக்கு வந்த இடத்தில் 10 கிலோ மீட்டர் ஓட்டம்!- ஆச்சரியமூட்டிய அமைச்சர்கள்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜும் நடை மற்றும் மெது ஓட்டமாக பத்துகிலோ மீட்டர் தூரம் இன்று காலையில் பயிற்சி மேற்கொண்டனர். நடைபயிற்சிக்கான உடையோடு, இவர்கள் சாமானியர்கள் போலவே ஓட்டமும், நடையுமாக பத்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் தன் உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். சிலம்பக் கலையிலும் இவர் மிகச்சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்துபவர். வழக்கமாகவே, இவர் வீட்டில் எப்போதும் உடற்பயிற்சிகள் செய்துவிட்டே தன் அன்றாடப் பணியைத் தொடங்குவார். இந்நிலையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளைத் தொடங்கி வைக்கவும், ஆய்வுப்பணிக்காகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கன்னியாகுமரி வந்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் மனோதங்கராஜும், மா.சுப்பிரமணியனும் சர்வதேச சுற்றுலாதளமான கன்னியாகுமரியில் இருந்து, மணக்குடி என்னும் மீனவ கிராமம் வரை நடைபயிற்சி மற்றும் இடை, இடையே மெது ஓட்டப் பயிற்சியிலும் ஈடுபட்டனர். கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி கிராமம் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. போக, வர இரண்டும் சேர்த்து அமைச்சர்கள் மனோதங்கராஜ், மா.சுப்பிரமணியன் ஆகியோர் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு பயிற்சி மேற்கொண்டனர். பொதுமக்கள் அதிகம் நடமாடும் கிராமப்புற பகுதிகளில் அமைச்சர்கள் நடைபயிற்சிக்கான உடைகளான பெர்மடாஸ், பேண்ட் உடன் சாலையில் ஓடியது பொதுமக்களை ஆச்சர்யமூட்டியது. வழியில் இவர்களை அடையாளம் கண்ட பொதுமக்கள் சிலர் சொன்னக் குறைகளையும் கேட்டதோடு, தீர்வு கிடைக்க வகை செய்வதாகவும் சொல்லிச் சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in