‘தமிழ்நாட்டில் நம் மக்கள் தாக்கப்படுகிறார்கள்’ -பிஹார் சட்டப்பேரவையில் கொந்தளிப்பு

பிஹார் சட்டப்பேரவையில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
பிஹார் சட்டப்பேரவையில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

தமிழ்நாட்டில் பிஹார் மக்கள் தாக்கப்படுவதாக அம்மாநில சட்டப்பேரவை இன்று அமளிக்கு ஆளானது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பிஹார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் அண்மையில் சென்னை வந்திருந்தார். இதனை சுட்டிக்காட்டி பிஹார் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சியான பாஜக இன்று கடும் அமளியில் ஈடுபட்டது.

’தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள். இந்த நேரத்தில் பிஹார் துணை முதல்வர், தமிழ்நாடு முதல்வர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று திரும்பியிருப்பது பிஹாரிகளுக்கு அவமரியாதை சேர்த்திருக்கிறது’ என்று பாஜக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு பதிலளித்த துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “தமிழ்நாட்டில் பிஹார் தொழிலாளர்கள் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள் என்பது வதந்தியாகும். பாஜகவினர் திட்டமிட்டு இந்த வதந்தியை பரப்புகின்றனர். அவர்கள் பகிரும் வீடியோக்களுக்கும் தமிழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த வீடியோ சுட்டிக்காட்டும் சம்பவம் எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்று பாஜகவினர் விளக்குவார்களா? தமிழகத்தில் பிஹாரிகள் தாக்கப்படுவதான குற்றச்சாட்டை அந்த மாநில டிஜிபி முழுமையாக மறுத்திருக்கிறார்” என்று விளக்கமளித்தார். எனினும் பாஜகவினர் அமளி தொடர்ந்தது.

தமிழ்நாட்டில் பிஹார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்ததுமே, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவின் பேரில், அம்மாநில தலைமைச்செயலர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர், தங்களது பதவியை ஒத்த தமிழ்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in