ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்... இரண்டு பேரின் மண்டை உடைப்பு: ஒற்றைத் தலைமையால் களேபரமான கூட்டம்!

ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்... இரண்டு பேரின் மண்டை உடைப்பு: ஒற்றைத் தலைமையால் களேபரமான கூட்டம்!

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பினருக்கிடையே அடிதடி ஏற்பட்டு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இருவரின் மண்டை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை எட்டி உள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்கெனவே, ஈபிஎஸ் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் வேறு வழியின்றி ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை அதிமுக நிர்வாகி ஒருவரின் வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில் நிறைவேற்றினர்.

இச்சூழலில், ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக நகர் கழகம் சார்பில் ஒற்றைத் தலைமை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என மொத்தமாக சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது, ஆலோசனைக் கூட்டத்தில் ஈபிஎஸ் தரப்பினர் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பாக மாறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து, இருதரப்பினரும் மண்டபத்தில் இருந்த சேர்களை எடுத்து மாறி மாறி அடித்துக் கொள்ள தொடங்கினர். இதனால், கூட்டத்தில் எடப்பாடி ஆதரவாளர்கள் இருவரின் மண்டை உடைக்கப்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அடி விழுந்தது. இக்கூட்டத்தில், ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் முனிசாமி மற்றும் அவரது மனைவி கீர்த்திகா முனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in