மண்டை உடைப்பு, திமுக கொடி கிழிப்பு: களேபரமான கருணாநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவி வழங்கும் விழா!

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பாண்டியன்
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பாண்டியன்

தேனி திமுகவில் உட்கட்சிப் பூசலால் கருணாநிதி பிறந்தநாளன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அடிதடி தாக்குதல், மண்டை உடைப்பு.‌ காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியில் கிளைக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.‌ இதனையொட்டி அப்பகுதியில் உள்ள அருந்ததியர் காலணியில் இலவச சேலை, அன்னதானம் மற்றும் வேலை வாய்ப்பு முகாம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், இதனை திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தொடங்கி வைப்பதாக இருந்தது.‌

உடைக்கப்பட்ட சேர்கள்
உடைக்கப்பட்ட சேர்கள்

இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் அருந்ததியர் காலணிக்கு வந்த சில நபர்கள் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளை கிழித்தெறிந்தனர். அங்குள்ள டியூப் லைட்களை பிடுங்கி பொதுமக்கள் மீது தாக்கியதாக கூறப்படுகிறது.‌ மேலும், நாற்காலிகளை உடைத்ததோடு இரும்புக்கம்பியால் பெண்கள் உள்ளிட்ட பலரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த பாண்டியனின் மண்டை உடைந்து ரத்தம் வடிந்தது. திமுக கட்சிக் கொடி, தலைவர்கள் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் கிழிக்கப்பட்டு, அசாதாரண சூழல் நிலவியதால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த பாண்டியனை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.‌ இதனிடையே, தாக்குதல் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து கொடுவிலார்பட்டி பொதுமக்கள் கூறும் போது, "உட்கட்சிப் பூசலால் திமுக தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதியின் தூண்டுதலின் பேரில், அவரது ஆதரவாளர்கள் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்களை கைது செய்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும்" என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in