காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் அதிரடி இடைநீக்கம்!

ரூபி மனோகரன் எம்எல்ஏ
ரூபி மனோகரன் எம்எல்ஏ

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ரூபி மனோகரனை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று இடை நீக்கம் செய்தது. நாங்குநேரி எம்.எல்.ஏ கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் தென் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்வை உருவாக்கியுள்ளது.

நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏவாக மட்டுமல்லாது, காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் இருப்பவர் ரூபி மனோகரன். சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மூவர் படுகாயம் அடைந்தனர். இதில் எம்.எல்.ஏ ரூபி மனோகரன், எம்.பியும் கட்சியின் எஸ்.சி அணித்தலைவருமான நிரஞ்சன்குமார் ஆகியோர் இன்று (24-ம் தேதி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதன் அடிப்படையில் இன்று கூடிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் நிரஞ்சன் குமார் ஆஜர் ஆனார். ஆனால் ரூபி மனோகரன் விளக்கத்தையும், நேரில் ஆஜராக அவகாசமும் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அறிவித்துள்ளது.

ரூபி மனோகரன் பேட்டி

நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரூபி மனோகரன், “கடந்த இருபது வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் உழைத்து வருகிறேன். நாங்குநேரி தொகுதியில் கட்சியை மிகவும் வலுவாக வைத்திருக்கிறேன். அதிக உறுப்பினர்களை சேர்த்து இருக்கிறேன். செய்யாத தவறுக்காக என்னைக் கட்சியில் இருந்து நீக்கியிருப்பது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in