கலவரத்தைத் தூண்டும் திமுக ஐ.டி விங்க்!... ஆர்எஸ்எஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆர்எஸ்எஸ்
ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறான செய்தி வெளியிட்டதற்காக திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த அமைப்பின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் தேசத்துக்கும், மக்களுக்கும் நெருக்கடி, துன்பம் வரும்போது தன்னலம், சுயவிளம்பரம் இல்லாமல் ஓடிச்சென்று துயர் துடைக்கிறது.   

சீனா, பாகிஸ்தான் நாடுகள் நம் மீது படையெடுத்தபோது ராணுவ வீரர்களுக்கு துணை நின்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்களை 1963-ம் ஆண்டு நடந்த குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் ராணுவத்தினருடன் ஆர்எஸ்எஸ் தொண்டர்களையும் பங்கேற்கச் செய்தார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.

நிலநடுக்கம், வெள்ளப்பெருக்கு முதற்கொண்டு சுனாமி தாக்குதல் வரை மக்கள் உயிர், உடமைகளை இழந்தபோது அவர்களைக் காப்பாற்ற ஓடிச்சென்றவர்களும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களே. கொனா பெருந்தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டபோது தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களின் மருத்துவம், உணவு தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் முன் களத்தில் நின்று பணியாற்றியதை நாடறியும். 

இந்த நிலையில், தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவின் ஐ.டி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து உள்நோக்கத்துடனும், மக்கள் மத்தியில் கலவரத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தும் வகையிலும் பதிவு ஒன்றை 22.9.2023 அன்று வெளியிட்டுள்ளனர்.

திமுக ஐ.டி விங்க் வெளியிட்ட பதிவு
திமுக ஐ.டி விங்க் வெளியிட்ட பதிவு

அந்த பதிவில், "சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாத செயலைச் செய்தவன் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே. இதன் மூலம் புல்புல் சாவர்க்கரின் சதித்திட்டத்தை செயல்படுத்தி அமைதியின் வடிவமான மகாத்மா காந்தியைப் படுகொலை செய்து நாட்டின் அமைதியை சீர்குலைக்க தொடங்கியது பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்" என்ற தலைப்பில் ஆதாரமற்ற குறிப்புகளோடு வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

1948-ல் மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்ட போது அரசியல் காரணங்களுக்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை காங்கிரஸ் தடை செய்தது. ஆனால், மகாத்மா காந்தியடிகள் கொலைக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு தடை விலக்கப்பட்டது. 

ஆர்எஸ்எஸ்
ஆர்எஸ்எஸ்

ஆனால், இதை மறைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2014-ல் மும்பை தானேவில் நடந்த கூட்டத்தில் இதே குற்றச்சாட்டை கூறினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 25.8.2016-ல் ராகுல் காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பை காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தி பேசவில்லை என்று கூறி பின்வாங்கினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சீதாராம் கேசரி, அர்ஜீன் சிங் ஆகியோரும் இதேபோல பேசி, பின்னர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

ஒரு பொய்யைத் திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்று நம்பும் திமுகவின் ஐடி விங்க், தற்போது விஷமத்தனத்தோடு மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடர்புபடுத்தியுள்ளதோடு, ஜனநாயக முறையில மக்கள் சேவையில் ஈடுபட்டுவரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தமிழக அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஒருவரின் தலைமையில் செயல்படும் திமுக ஐ.டி விங்கின் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அவப்பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் உள்ள இந்தப் பதிவை உடனே நீக்குவதோடு திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில், திமுக ஐ.டி விங்க் மீது வழக்கு தொடரப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in