தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு பேரணி திடீர் ரத்து: காரணம் என்ன?

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு பேரணி திடீர் ரத்து: காரணம் என்ன?

தமிழகத்தில் நாளை நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு பேரணி ஒத்திவைக்கப்படுவதாக தென் மண்டல தலைவர் திடீரென அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையிலும், அம்பேத்கர் நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டும் 50 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகள் தொடர்ந்தனர். இதனிடையே, ஆர்.எஸ்.எஸ். சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் பேரணி நடத்த போலீஸார் அனுமதி வழங்கியிருப்பதாகவும், 23 இடங்களில் உள்ளரங்குகளில் பேரணி நடத்தவும், 24 இடங்களை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மட்டும் 500 இடங்களில் தமிழக அரசு அனுமதி வழங்கியதையும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, தமிழக உளவுத் துறையின் அறிக்கையை ஆராய்ந்து, எஞ்சிய 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக நவம்பர் 4-ம் தேதி (நேற்று) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்துள்ள உத்தரவில், உளவுத் துறையின் அறிக்கையில், 2007, 2008-ல் பதிவான பழைய வழக்குகளே சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை மற்றும் நாகர்கோவில் ஆகிய 6 இடங்களைத் தவிர்த்து, ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்ட 3 இடங்கள் உள்பட 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணியை அமைதியான முறையில் மேற்கொள்ள போலீஸார் அனுமதி வழங்க வேண்டும். அதேசமயம், சுற்றுச்சுவர் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம் அல்லது விளையாட்டு அரங்குகளில் மட்டும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம். அந்த இடத்துக்குச் செல்லும் வழியில் போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் செய்யக்கூடாது.

மேலும், எவ்வித ஆயுதங்களையும் எடுத்துச் செல்லக்கூடாது. தனிப்பட்ட நபர் அல்லது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் குறித்து பேசக்கூடாது. மொழி, இனம், கலாச்சாரம், ஜாதியை மையமாகக் கொண்டு, பிரிவினையைத் தூண்டும் வகையிலான கருத்துகளைக் கூறக் கூடாது. இவற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல் களையும் பாடக் கூடாது. பேரணியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும். அதேபோல, 44 இடங்களிலும் போலீஸார் மற்றும் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஏற்க வேண்டும். எஞ்சிய 6 இடங்களில், 2 மாதங்களுக்குப் பிறகு இயல்புநிலை திரும்பியதும் பேரணி நடத்துவது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் புதிதாக மனு அளிக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த ஊர்வலம் ரத்து செய்யப்படுவதாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தென் மண்டல தலைவர் வன்னியராஜன் அறிவித்துள்ளார். "அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ நாலு சுவர்களுக்குள்ளோ நடத்த வேண்டும் என்ற நிபந்தனை ஏற்புடையது அல்ல. காஷ்மீர், கேரளம், மேற்குவங்கம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொதுவெளியில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் நாளை திட்டமிட்டப்பட்டிருந்த பேரணியை நடத்த இயலாது" என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in