முதல்வர், தமிழிசைக்கு எதிராக திடீர் முழக்கம்: போலீஸார் அதிர்ச்சி

புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்  நடைபெற்றது.
புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை  முன்னிட்டு ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்பில் நடத்த இருந்த ஊர்வலத்திற்கும்,  கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் நடத்த இருந்த மனித சங்கிலி போராட்டத்திற்கும் தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த  நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இந்த  இரண்டுமே இன்று நடைபெற்றன. 

எதிர்க்கட்சிகள் நடத்திய மனிதசங்கிலி மதநல்லிணக்கப் போராட்டம்
எதிர்க்கட்சிகள் நடத்திய மனிதசங்கிலி மதநல்லிணக்கப் போராட்டம்

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று  புதுவை பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. புதுவை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணகுமார், புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் உள்ளிட்டவர்கள் இதில்  கலந்து கொண்டனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோர் அணிவகுத்து கலந்து கொண்டனர்.   

காமராஜர் சிலையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம்  காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன்வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக சிங்காரவேலர் சிலையருகில்  நிறைவடைந்தது. அதே போல் காரைக்காலில்  புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட  அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை சாலை சென்றடைந்தது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது போலவே திமுக உள்ளிட்ட  மதச்சார்பற்ற கட்சிகள் நடத்திய மனித சங்கிலி போராட்டத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் அண்ணா சிலையில் இருந்து காமராஜர் சிலை வரை மனிதசங்கிலி மதநல்லிணக்கப் போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அருகே காமராஜர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வருகை தந்தனர்.

அப்போது மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநர் மற்றும் முதல்வரை எதிர்த்து கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனடியாக போலீஸார், மனிதசங்கிலி போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in