ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் திடீர் தாக்குதல்: கோவையைத் தொடர்ந்து திருப்பூரிலும் பதற்றம்

ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் திடீர் தாக்குதல்: கோவையைத் தொடர்ந்து திருப்பூரிலும் பதற்றம்

கோவையில் பாஜகவினர் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில், திருப்பூரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை வீசி சென்றார்.  அதுபோல், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர்ப் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.  அத்துடன் அவர்களின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் திருப்பூர் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் கல் எறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திருப்பூர், ராக்கியாபாளையம் அடுத்த ஜெய் நகர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேகப்பிரிவு ஆசிரியராக இருந்து வருகிறார். இன்று மதியம் அவரது வீட்டிற்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் அருகிலிருந்தவர்களிடம் பிரபுவின் வீடு எது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். பின்பு அவர்கள் கொண்டு வந்த கற்களைக் கொண்டு, அந்த வீட்டில் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் பின்பக்கம் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ஜன்னல் கண்ணாடி மற்றும் காரின் பின்பக்கம் சேதம் அடைந்துள்ளது. சத்தம் கேட்டு பிரபு வெளியே வந்த போது அங்கிருந்த நால்வரும் பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் பாஜகவினர் அப்பகுதியில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

இதையடுத்து அங்கு வந்த நல்லூர் காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in