அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!

அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் இமாம் உமர் அகமது இல்யாசியை சந்தித்தார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மற்றும் அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர்களுக்கு இடையேயான இந்த சந்திப்பு டெல்லி கஸ்தூரிபா காந்தி மார்க் மசூதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மோகன் பகவத்துடன் ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகிகள் கிருஷ்ண கோபால், ராம் லால் மற்றும் இந்திரேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்து வரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கு சென்று அதன் தலைமை மதகுருவுடன் சந்திப்பு நடத்தியது பேசுபொருளாகியுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து பேசிய தலைமை இமாமின் மகன் சுஹைப் இல்யாசி, “இது நாட்டிற்கு ஒரு நல்ல செய்தியை அனுப்புகிறது. நாங்கள் ஒரு குடும்பத்தைப் போல விவாதித்தோம். எங்கள் அழைப்பின் பேரில் அவர்கள் வந்தது மிகவும் அற்புதமானது" என்று தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியாகும். "ஆர்எஸ்எஸ் தலைவர் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கிறார். இது தொடர்ச்சியான பொது கலந்துரையாடல் செயல்முறையின் ஒரு பகுதியாகும்" என்று ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் கூறினார்.

முன்னதாக, சமீபத்தில் மோகன் பகவத் ஐந்து முஸ்லீம் அறிவுஜீவிகளைச் சந்தித்து, நாட்டில் தற்போதைய நல்லிணக்கச் சூழல் குறித்து உரையாடினார். அப்போது இரு தரப்பினரும் பிளவுபடுத்தும் சொல்லாட்சியைக் குறைக்க ஒப்புக்கொண்டனர் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஆட்சேபனைகள் இருப்பதைப் பற்றியும் விவாதித்தனர்.

இந்த 75 நிமிட சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்ஒய் குரைஷி, "சமரசமற்ற சூழ்நிலையில் நான் மகிழ்ச்சியடையவில்லை. ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையுடன் மட்டுமே நாடு முன்னேற முடியும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாக கூறினார்.

மேலும், மோகன் பகவத் தனக்கு கவலை அளிக்கும் விஷயங்களைப் பற்றி விவாதித்தார், பசு வதை மற்றும் இந்துக்களை காஃபிர் என்று அழைப்பது குறித்து வருத்தம் தெரிவித்தார். "சிலர் இஸ்லாத்தை நம்புகிறார்கள், அவர்களை 'மோமின்' என்று அழைக்கிறார்கள், நம்பிக்கை இல்லாதவர்கள் 'காஃபிர்' என்று அழைக்கப்படுகிறார்கள். அது நடுநிலை வார்த்தையாக இருந்தது, இப்போது அது தவறாகிவிட்டது. நாங்கள் அதை நிறுத்துவதில் பிரச்சினை இல்லை" என்று குரைஷி கூறினார்.

சில வலதுசாரிகள் முஸ்லிம்களை ஜிஹாதி என்றும் பாகிஸ்தானியர் என்றும் அழைப்பதாக முஸ்லிம் தலைவர்கள் குறிப்பிட்டனர். அதற்கு பதிலளித்த மோகன் பகவத், "அவர்கள் முஸ்லீம்களின் விசுவாசத்தை சந்தேகிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் தங்கள் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். முஸ்லிம்களும் இந்தியர்களே. நாம் ஒரே டிஎன்ஏவைப் பகிர்ந்து கொள்கிறோம். இங்குள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் மதம் மாறியவர்கள்தான்" என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் டெல்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா, முன்னாள் எம்பி ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஷெர்வானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in