‘பழைய பழனிசாமிக்கு கொலை வழக்கு; புது பழனிசாமிக்கு கோடநாடு வழக்கு’ - அனல் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார்; புது பழனிசாமி கோடநாடு வழக்கை எதிர்கொள்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய தற்காலிக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார். “பழைய பழனிச்சாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா.. நடக்காது ஸ்டாலின் அவர்களே” என்று மைக்கைக் கடித்தபடி பேசியிருக்கிறார்.

அவர்களின் கட்சியில் எதிரும் புதிருமாக கோஷ்டி மோதல்கள் நடத்திக்கொண்டு திமுக மீது பாய்வது என்பது திசைத் திருப்புகிற வேலையன்றி வேறு எதுவுமல்ல. அந்தக் கட்சித் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, திமுகவை எதிர்த்துதான் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போதும் அதைத்தான் பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டம் செய்து கொண்டிருக்கிறது.

அதிமுகவைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி - பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள். அங்கே கயிறு இழுக்கப்படுவதற்கேற்ப இங்கே பொம்மைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. ஆடும் பொம்மைகளுக்கு வெற்று வசனங்கள் எதற்கு?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பழனிசாமி எதற்காகத் திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டிக் கொள்கிறார்? பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார்; புது பழனிசாமி கோடநாடு வழக்கை எதிர்கொள்கிறார்.

பழைய பழனிசாமி ஜெயலலிதா - சசிகலா கால்களில் விழுந்து கிடந்தார்; புது பழனிசாமி மோடி - அமித்ஷா கால்களில் விழுந்து கிடக்கிறார்” என தெரிவித்துள்ளார்

மேலும், “கீழே குனிந்து, மேஜைக்கடியில் கால்களைத் தேடி, தரையில் தவழ்ந்து, நெடுஞ்சாண்க்கிடையாக சரணாகதி அடைந்து பதவியைப் பெற்றவர் என்பதுதானே பழனிசாமியின் வரலாறு. வழக்குகள் போட்டு தி.மு.க. பழி வாங்குகிறது என்று பொங்கிய பழனிசாமி, வருமான வரித் துறை - அமலாக்கத்துறை - சி.பி.ஐ என அவரது ஆட்சிக்காலத்திலேயே மத்திய அரசின் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் உயர்த்தியது உண்டா?

இப்போதுகூட அவருடைய ஆட்சிக்காலத்து அமைச்சர்கள் முதல் ஒப்பந்தக்காரர்கள் வரை பலருக்கும் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறதே?. பொதுக்குழுவில் திமுக வை நோக்கிப் பொங்கிய பழனிசாமி, ஒன்றிய பாஜக அரசு பழிவாங்குகிறது என்று பொங்க வேண்டாம், முணுமுணுக்கக்கூட தைரியம் உண்டா?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது என்று வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு, தனது ஆட்சிக்காலம் முழுவதும் குடும்ப டெண்டர் அரசியல் நடத்தியவர்தான் பழனிசாமி. இதோ அண்மையில்கூட கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சோதனைக்குள்ளான இந்த இருவரும் யார்?

எங்கே ஒரே ஒரு வார்த்தை, "பழைய பழனிச்சாமினு நினைச்சிக்கிட்டீங்களா, மோடி அவர்களே” என்று பேசிப் பாருங்களேன். உங்களின் பழைய கதை, புதிய கதை என எல்லாக் குப்பைகளும் கிளறப்படும். அதன் நாற்றத்தை உங்கள் கட்சியினராலேயே தாங்க முடியாது” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in