`ஜெயலலிதாவைப் போல ஈபிஎஸ், வேலுமணி விரைவில் சிறைக்கு செல்வார்கள்'- அதிரடி கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி!

`ஜெயலலிதாவைப் போல ஈபிஎஸ், வேலுமணி விரைவில் சிறைக்கு செல்வார்கள்'- அதிரடி கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி!

“திமுக கொடுத்த புகார் பட்டியலில் உள்ள அத்தனை குற்றச்சாட்டுகளையும் நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். பட்டியலில் உள்ள அத்தனை பேரும் உள்ளே சென்றார்கள். சிலர் தண்டனை பெற்றுவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள். அதுபோல எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் விரைவில் சிறைக்குப் போவார்கள்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றமே விசாரணை செய்யும் எனவும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கத் செய்யத்தேவையில்லை எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “முதல்வரோ, துறை அமைச்சரோ தன்னுடைய துறைக்கு உட்பட்ட டெண்டர்கள் விடும் போது அதில் உறவினர்கள், நெருக்கமானவர்கள் இடம்பெற கூடாது என்பது விதி. ஆனால் 4,800 கோடி ரூபாய் முறைகேட்டில் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் இரண்டு பேருக்கு மட்டுமே டெண்டர்கள் வழங்கி இருக்கிறார்கள். இதில் முதலில் ஒரு மதிப்பீட்டுத் தொகையும், அதையே இரட்டிப்பாகக் காட்டி முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி நாங்கள் உயர் நீதிமன்றத்திலே வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். உரிய முறையில் விசாரணை செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் எனவும் யார் விசாரணை செய்கிறார்கள் என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை எனவும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம். இருதரப்பினரின் வாதத்தைக் கேட்ட நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம் என தெரிவித்தது.

2016-ம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கண்டெய்னர் லாரியில் 570 கோடி ரூபாய் பிடிபட்டது. அந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. வழக்கு விசாரணை 6 வருடங்களைக் கடந்த நிலையிலும், இதுவரை அந்தப் பணம் யாருடையது என்பதை சிபிஐ கண்டுபிடிக்கவில்லை. அந்த வழக்கை விசாரணை செய்து வரும் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும். அப்போது யாருடைய பணம் என்ற உண்மை வெளிச்சத்திற்கு வரும். 1995-ம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர்கள் மீது கருணாநிதி கொடுத்த பட்டியலில் கொடுக்கப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளையும் நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். அத்தனை பேரும் உள்ளே சென்றார்கள். சிலர் தண்டனை பெற்றுவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை வழக்கு விசாரணைக்கு வரும். உள்ளே போக வேண்டியவர்கள் உள்ளே போவார்கள். எஸ்.பி வேலுமணி வழக்கு, கோடநாடு கொலை வழக்கு என அனைத்து வழக்குகளின் முடிவையும் விரைவில் காணலாம்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in