கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை அதிமுக பொதுக்குழுவிற்காக செலவு செய்துள்ளார். ஈபிஎஸ் மீது ஆர்.எஸ்.பாரதி பகீர் குற்றச்சாட்டு

கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை அதிமுக பொதுக்குழுவிற்காக செலவு செய்துள்ளார். ஈபிஎஸ் மீது ஆர்.எஸ்.பாரதி பகீர் குற்றச்சாட்டு

நட்சத்திர விடுதியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களைத் தங்க வைத்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தை ஈபிஎஸ் செலவு செய்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியின் விளைவாக சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமைக்கழகம் முன்பு ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று பயங்கரமாக மோதிக்கொண்டனர். கம்பு, கல் ஆகியவற்றைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பொதுமக்கள், காவலர்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த மோதலுக்கு திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “திமுகவிலிருந்து வைகோ பிரிந்த போது அறிவாலயம் வழியாக ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது. அப்படி ஊர்வலம் சென்றால் கலவரம் ஏற்படும் என்பதால் அறிவாலயம் வழியாகச் செல்ல அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இன்று ஓபிஎஸ்சை கைக்குள் வைத்துக் கொண்டு திமுக அதிமுகவிற்கு எதிராகச் செயல்படுகிறது.” என கூறியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டு திமுக மறுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், “அதிமுகவிற்குள் இருக்கிற சண்டையில் திமுகவின் மீது கோபப்படுவதில் நியாயம் கிடையாது. வருமான வரித்துறையெல்லாம் மத்திய அரசின் கையில் இருக்கிறது. அதைக் கண்டித்துப் பேசுவதற்கு அவர்களுக்குத் தெம்பில்லை. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பதைப் போல எதற்கெடுத்தாலும் முதல்வரையும், திமுகவையும் தாக்கிப் பேசுவது வாடிக்கையாகிவிட்டது" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "ஜெயலலிதா காலத்திலேயோ, எம்ஜிஆர் காலத்திலேயோ பொதுக்குழுவிற்காக நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்களா? அந்த செலவையெல்லாம் எடப்பாடி கம்பெனிதான் கட்டி இருக்கிறது. கோடிக்கணக்கில் கொள்ளையடித்த பணத்தைச் செலவு செய்கிறார். சசிகலாவின் காலில் விழுந்து பதவியை வாங்கியவர்கள் திரும்பவும் சேரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றவுடன் கலவரம் ஏற்படுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 145-ன் படி அந்த சொத்திற்குள் நுழையத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அடிப்படையில் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் நீதிமன்றத்திற்குப் போய் தடை உத்தரவை நீக்கலாம். பேரணிக்கு அரசிடம் அனுமதி கேட்டால் தானே நாங்கள் அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும். அப்படி இல்லாத பட்சத்தில் நாங்கள் எப்படி தடை விதிக்க முடியும். இதெல்லாம் ஜெயக்குமாருக்குத் தெரிந்ததுதானே? அதிமுக உடைந்த கண்ணாடி; ஒட்ட வைக்க முடியாது ” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in