லாலு குடும்பத்தினர் வீடுகளில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம், ரூ.600 கோடிக்கான ஆவணங்கள்: அமலாக்கத்துறை
ரயில்வே வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே வேலை மோசடி வழக்கு தொடர்பாக பீகாரில் உள்ள பல நகரங்களிலும் மற்றும் பிற இடங்களிலும் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. லாலு பிரசாத் யாதவின் தெற்கு டெல்லி வீடு, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ், மகள்கள் ராகினி யாதவ், சந்தா யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. நேற்றைய சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் மற்றும் பிற துறைகளில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் சார்பில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சோதனையில் மேலும் ரூ.600 கோடி குற்றச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு ரயில்வே வேலை மோசடி தொடர்பான வழக்கில் இன்று ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் தனது மனைவியின் உடல்நிலையை காரணம் காட்டி புதிய தேதியை கோரியுள்ளார்.