
`தென் மாவட்டங்களில் கள ஆய்வு மல்லிகை மணம் மணக்குமா? காகித பூவாக இருக்குமா?' என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்திலே, பல்வேறு ஆய்வுகளுக்காக கள ஆய்வு என்கின்ற அந்த தலைப்பிலே, முதலமைச்சர் இரண்டு நாள் மதுரையிலே கள ஆய்வு செய்து வருவதாக செய்தி குறித்து வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரின் தலைமையிலான அம்மாவின் அரசிலே கோவை, சேலம் மதுரைக்கு பஸ் போர்ட் என்கிற இந்த மத்திய அரசின் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கான நிலம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செக்கானூரணி பகுதியில் அங்கே கண்டறியப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நிலைகுறித்து முதலமைச்சர் கள ஆய்வில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?
தென்மாவட்டத்தின் நுழைவாயிலாக இருக்கிற மதுரை திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் அகற்ற வேண்டும் என்கிற, ஒட்டுமொத்த தென் மாவட்ட மக்களுடைய கோரிக்கையை, மத்திய அரசினுடைய டோல்கேட் அகற்றுகின்ற அந்த பட்டியலில் முன்னுரிமை அடிப்படையிலே, இந்த கள ஆய்வில் முதலமைச்சர் எடுத்து விவாதித்து அதற்கு தீர்வு காண்பாரா?. மருந்து சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் மதுரையிலே அமைப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா? மொத்தத்தில் தென் மாவட்ட மக்களுடைய வளர்ச்சிக்கான ஆய்வு என்கிற அடிப்படையிலேயே, மக்களுடைய எதிர்பார்ப்புக்கு இந்த கள ஆய்வு விடை கிடைக்குமா? அல்லது முற்றிலுமாக இந்த கள ஆய்வு என்பது ஒரு ஆய்வாகவே முடிந்துவிடுமா?
தென் மாவட்ட மக்களுடைய தொழில் வளர்ச்சிக்கும், இளைய சமுதாயத்திற்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை இந்த மாவட்டங்களில் எடப்பாடியாரின் சீரிய சிந்தனையில் உதித்த காவேரி குண்டாறு இணைப்பு நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?
திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக, விவசாயத்தை மேம்படுத்துவதற்காக, குடிநீர் பற்றாக்குறை போக்குவதற்காக இதன் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்?
கலைஞர் நூலகத்திற்கு காட்டுகிற அக்கறையும், ஆர்வமும், வேகமும், விவேகமும், முக்கியத்துவமும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், பொருளாதார மேம்பாட்டு சாலைகளுக்கும், இளைய சமுதாயத்திற்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கும், இளைய சமுதாயத்திற்கு கல்விக்கான முக்கியத்துவம் வழங்குவதற்கு முதலமைச்சர் கள ஆய்வு பயன் அளிக்குமா அல்லது பயனற்று போதுமா?. முதலமைச்சரின் கள ஆய்வு மதுரை மல்லிகையாக மணம் பரப்புமா, காகித பூவாக இருக்குமா?
தென் மாவட்ட மக்களுடைய வளர்ச்சிக்காக இந்த கள ஆய்வு பயன்பட வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பு ஆகும். விவசாயிகளையும், சிறு குறு நிறுவன தொழில் முன்னேற்றங்களையும் தொழில் முனைவர்களையும் சந்தித்தபோது அதற்கு முதலமைச்சர் பொறுத்திருங்கள், காத்திருங்கள் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் இதற்கு விடை கிடைக்குமா? கானல் நீர் ஆகுமா?. திராவிட முன்னேற்றக் கழக அரசில் அம்மா அரசின் தொலைநோக்கு திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள், முன்னோடி திட்டங்கள், வேலைவாய்ப்பை வழங்குகிற திட்டங்கள், பொருளாதார திட்டங்கள் எல்லாம் இன்றைக்கு கானல் நீராக காணாமல் போகிற ஒரு நிலையை உருவாக்கிஉள்ளது அதற்கு தீர்வு காண்பாரா?' என்று கூறியுள்ளார்.