
ஆர்.என்.ரவியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் மத்திய அரசும் அவரது செயலுக்கு ஒப்புதல் கொடுக்கிறது என்றுதான் அர்த்தம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
நெல்லையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதுவரை தமிழக அரசியலில் நடக்காத அநீதியை ஆளுநர் மாளிகை நடத்திவருகிறது. இதுவரை எந்த மாநிலத்திலும், எந்த ஆளுநரும் நடந்துகொள்ளாத முறையில் சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துள்ளார். அநாகரிகமாக செயல்பட்ட ஆளுநரை உடனே வெளியேற்றவேண்டும்.
ஆளுநர் உரை என்பதே தமிழக அரசின் கொள்கை, சாதனைகளை விளக்கும் உரைதான். அப்படிப்பட்ட உரையை வாசிக்காமல் அவராகவே சிலவற்றை சேர்த்துவாசித்துவிட்டு அந்த உரைக்கு ஏற்கெனவே மறுப்பு சொன்னதாக பொய் பிரச்சாரத்தை ஆளுநர் மாளிகை பரப்புகிறது. தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற வேண்டும். இவரை ஆளுநர் பொறுப்பில் இருந்தும் நீக்கவேண்டும். மத்திய அரசு இதைச் செய்யாவிட்டால் அதுவும் ஆளுநருக்கு உடந்தையாக இருப்பதாகவே அர்த்தம்.
ஆன்லைன் ரம்மியில் இதுவரை 40 பேர் தற்கொலை செய்து உள்ளனர். நேற்றுகூட நெல்லை, பணக்குடியில் ஒருவர் இறந்துள்ளார். ஆனால், ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யாமல் ஆளுநர், அதை நடத்துபவர்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து தேநீர் விருந்து நடத்துகிறார். சட்டமன்றத்தில் முதல்வர் பண்பாக நடந்துகொண்டார். ஆளுநர் நாட்டுப்பண்ணிற்கு முன்பே கிளம்பிவிட்டார்.சேது சமுத்திரத் திட்ட தீர்மானம் தித்திப்பான செய்தி ”என்றார்.