‘அவர் பாஜகவின் ஆளுநர்’ - ஆர்.என்.ரவியை விமர்சித்த துரை வைகோ

‘அவர் பாஜகவின் ஆளுநர்’ - ஆர்.என்.ரவியை விமர்சித்த துரை வைகோ
செயல்வீரர் கூட்டத்தில் உரையாற்றும் துரை வைகோ

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்துக்கான ஆளுநராக இல்லை; அவர் பாஜகவின் ஆளுநர் ஆகவே இருக்கிறார் என்று மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதிமுக தலைமைக் கழக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ நேற்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தார். நேற்று மயிலாடுதுறையில் செயற்குழுக் கூட்டத்தை முடித்துக்கொண்ட அவர் இன்று சீர்காழியில் படத்திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மதநல்லிணக்கம், சமத்துவம், சமுதாய ஒற்றுமை இருக்கிறது. மதவாத சக்திகள் தமிழகத்தில் ஊடுருவக் கூடாது என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இப்போது இருக்கும் ஆளுநரை தமிழக ஆளுநர் என்று சொல்லக் கூடாது. பாரதிய ஜனதா கட்சியின் ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என்றைக்கு பாரதிய ஜனதா கட்சி ஆளுநராக மாறினாரோ அன்றே அவர் தமிழக ஆளுநர் இல்லை என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அதனால் தான் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது” என்றார்.

மேலும், “மத்திய அரசு ஒதுக்கீடு 800 மெகாவாட் வராத காரணத்தாலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவும் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கோடைக்காலத்தில் மின்பயன்பாடு 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்தத் தருணத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்வெட்டு ஏற்படுகிறது. தமிழக அரசு தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதி சம்பந்தமாக முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண முடியாது. மின்வெட்டுக்கு முக்கியக் காரணம் மத்திய அரசுதான். கோடைக்காலங்களில் மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை அறிந்தும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 50 சதவீதம் நிலக்கரியைக் கொண்டுதான் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மக்கள் விரோத, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களைத் தமிழக அரசு ஒதுபோதும் அனுமதிக்காது. உயர்கல்வி படிப்புகளுக்கு மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டு இருப்பதால் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும். நீட் போன்று உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். பாஜகவின் மக்கள் விரோத பொய் பிரச்சாரத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" என்றார் துரை வைகோ.

Related Stories

No stories found.