ராகுல் யாத்திரையில் சிறப்பித்த ரியா சென்

ராகுல் யாத்திரையில் சிறப்பித்த ரியா சென்

பூஜா பட்டை தொடர்ந்து மற்றொரு பாலிவுட் நட்சத்திரமான ரியா சென், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் இன்று(நவ.17) பங்கேற்று காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகமூட்டினார்.

பாதியாய் இளைத்த தேகம், முகத்தை மண்டிய தாடி, களைத்த கண்கள் என ராகுல் காந்தியின் தோற்றம் அடியோடு மாறிப்போயிருக்கிறது. ஆனபோதும் தனது ஒற்றுமை யாத்திரையின் நெடுகில் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை கண்டதும் உற்சாகமாகி விடுகிறார். அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது, நலம் விசாரிப்பது என சில நிமிடங்கள் செலவிட்ட பிறகே பயணத்தை தொடர்கிறார்.

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் தேர்தல் பிரச்சாரங்களிலும் களம் காணாது அரசியல் அதிரடி கருத்துக்களை தெரிவித்தபடி தனது இருப்பை உறுதி செய்கிறார். மழை,வெயில், குளிர் என சூழல் எதுவானாலும் ராகுலின் பயணம் தொடர்கிறது. அண்மையில் ராகுல் மழையில் நனைந்தபடி கூட்டமொன்றில் பங்கேற்று பேசியதன் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாயின. கேஜிஎஃப்-2 காப்பிரைட் வழக்கு காரணமாக, ஒற்றுமை பயணத்தில் களைத்திருக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கான பாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

திரைப்பாடல்களுக்கு பதிலாக திரை நட்சத்திரங்களே பங்கேற்று பயணத்தை சிறப்பிக்க தொடங்கியுள்ளனர். ராகுல் யாத்திரை ஹைதராபாத்தை கடந்தபோது பங்கேற்ற பூஜா பட்டை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் ரியா சென் சிறப்பித்துள்ளார்.

திரிபுரா ராஜ குடும்ப பின்னணியை சேர்ந்த ரியா சென் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கியவர்.இந்தி மற்றும் வங்காள சினிமாக்களில் தடம் பதித்த தாய் மூன்மூன் சென்-ஐ பின்பற்றி பல மொழிகளில் ரியா சென் நடித்து வருகிறார். தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் மகன் மனோஜ் ஜோடியாக ரியா சென் அறிமுகமான தாஜ்மகால் அவரை ஏமாற்றியது. எனினும் தெலுங்கு, வங்காளம், இந்தி என ரியாவின் திரைப்பயணம் தொடர்கிறது.

ராகுல் காந்தியின் தொடர் நடைபயணத்தின் ஊடாக அவர் முழங்கும் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளைவிட பூஜா பட், ரியா சென் போன்றோரின் பங்கேற்பே பொதுவெளியில் அதிகம் கவனம் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in