மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் உயரும் விலைவாசி: கே.எஸ்.அழகிரி பேட்டி

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் உயரும் விலைவாசி: கே.எஸ்.அழகிரி பேட்டி

மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் நாட்டில் தாறுமாறாக விலைவாசி உயர்ந்திருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணம் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக தென் மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “மக்களை நேசிக்கவும், இந்தியாவை ஒற்றுமைப்படுத்தவும் , மக்களை பிரிக்காதவகையில் அன்பை பிரதானமாக்கி ஒற்றுமைப்படுத்தவும்தான் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடக்க உள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் கலாச்சாரமே மக்களை பிரிக்கக்கூடியதாகவே உள்ளது. நாட்டில் இப்போது வரலாறு காணாத அளவுக்கு விலைவாசி உயர்வு உயர்ந்துள்ளது.

தவறான பொருளாதாரக் கொள்கையினால் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டுகிறது. விவசாயிகளுக்கு இருமடங்கு வருமானம் தருவதாகச் சொன்ன மோடி அதையும் செய்யவில்லை. அரசின் இந்த வீழ்ச்சியை மக்கள் மன்றத்தில் சொல்லவும் இந்தப் பயணம் அவசியம் ஆகிறது. பாஜகவுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இதுவரை இரண்டுமுறை மட்டுமே தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஒன்று, நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த போது. இன்னொன்று பிரதமராக வாஜ்பாய் சென்றபோது! அப்போது கொண்டாடிய காரணம் என்ன? இப்போது கொண்டாடிய காரணம் என்ன என பாஜகவினரே தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in