ராகுலை வளர்த்துவிடும் பாஜக; பின்னணியில் பொதிந்திருக்கும் மாயக் கணக்குகள்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுலுக்காக காங்கிரஸ் கட்சி செய்யாததை, பாஜக மறைமுகமாக செய்து வருகிறது. அந்தளவுக்கு அரசியலில் ராகுலின் புதிய புறப்பாட்டுக்கு பாஜக அடியெடுத்து தந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ராகுலை முடக்கும் பாஜகவின் முயற்சியில், அவருக்கு மக்கள் மத்தியிலான செல்வாக்கு அதிகரிக்கும் என்பதை பாஜக அறியாமலா இருக்கும்? அப்படியான போக்கின் அடுத்தக்கட்டம் என்னவாக இருக்கும்? அரசியல் பிணக்கில் பொதிந்திருக்கும் பாஜகவின் மாயக் கணக்குகள் என்ன? அவற்றையெல்லாம் மீறி காங்கிரஸ் கரை சேருமா? மெய்யாலுமே ராகுலின் விஸ்வரூபம் சாத்தியமாகுமா? என்பதெல்லாம் அரசியலை கூர்ந்து கவனிப்போர் மத்தியில் தொக்கி நிற்கும் கேள்விகள்.

ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல்
ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல்

ராகுல் ருத்ரதாண்டவம்

ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமைப் பயணம் கன்னியாகுமரியில் தொடங்கியபோது, பாஜக அதனை உதாசீனம் செய்தது. பாத யாத்திரை பற்றி பேசியோ, ராகுல் பயணத்தை விமர்சித்தோ பெரியாளாக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தது. ஆனால், பாத யாத்திரையில் ராகுலுக்கு கிடைத்த வரவேற்பும், திரண்ட கூட்டமும் பாஜகவை அமைதியிழக்கச் செய்தது. கொரோனா வழிகாட்டுதல்களை காட்டி முடக்கப் பார்த்தது. சாவர்க்கர் பெயரிலான விவாதத்தில் ராகுலை நெருக்கடிக்குள் தள்ளியது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்தான ராகுலின் ஸ்ரீநகர் பேச்சுக்கு, அவரது டெல்லி வீடு தேடி வந்து போலீஸார் விசாரித்துச் சென்றனர்.

இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து பிபிசி ஆவணப்படமும், அதானிக்கு எதிரான அமெரிக்க ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையும் பாஜகவுக்கு எதிராக உருவெடுத்தன. ராகுல் அந்த விவகாரங்களை லாவகமாக கையாண்டது, அவர் ’பப்பு’ அல்ல என பொதுவெளியில் உரைக்கச் செய்தது. முக்கியமாக அதானி விவகாரத்தை முன்வைத்து, பிரதமர் மோடியை பதிலளிக்குமாறு ராகுல் எழுப்பிய கேள்விகள், சர்வதேச அளவில் கவனம் பெற்றன. அடுத்து லண்டன் கேம்ப்ரிட்ஜில் பேசிய ராகுல், ’இந்தியாவில் ஜனநாயகம் படும்பாட்டை விவரித்தது’ பாஜகவின் இருக்கையில் முள் ஏற்றியது. அதன் பிறகே ராகுலை முடக்குவதற்காக, உறங்கிக்கிடந்த அவதூறு வழக்கினை தூசு தட்டினார்கள்.

தகுதி இழப்பும், மிகுதி மீட்பும்

கர்நாடக மாநிலம் கோலார் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், மோடி பின்னொட்டை விமர்சித்த ராகுலின் அவல நகைச்சுவைக்கு எதிராக குஜராத்தின் சூரத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு தொடுத்தவரே விசாரணைக்கு தடை பெற்றிருந்த நிலையில் திடீரென, அண்மையில் உயிர் பெற்றது. புதிய நீதிபதி பொறுப்பேற்று அவசரமாய் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக சிறைத்தண்டனை பெற்றால், எம்பி பதவி இழக்க நேரிடுவதோடு, 8 ஆண்டுகளுக்கு தேர்தலிலும் போட்டியிட முடியாது. அப்படி 2 ஆண்டு சிறைக்கான நீதிமன்ற தீர்ப்பு வெளியான சூட்டில், ராகுலின் எம்பி பதவியை இழப்புக்கு ஆளாக்கியது மக்களவை செயலகம். காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்திராத அடி இது.

ஆனால், நீதிமன்ற தீர்ப்பு, பதவி இழப்பு, அதிகாரபூர்வ வீட்டை காலி செய்ய உத்தரவிட்டது என ராகுலுக்கு எதிரான சகலமும், அவரை நாடு நெடுக கொண்டு சென்றன. செய்திகளில் மோடியும், அவரது பிரதாபங்களும் ஆக்கிரமித்திருந்த நிலைமாறி அனைத்தையும் ராகுல் நிறைத்தார். ’தகுதியிழந்த எம்பி’ என ட்விட்டரில் தனது முகப்பை ராகுல் மாற்றினார்.

19 ஆண்டுகளாக தங்கியிருந்த வீட்டை காலி செய்யும் ராகுலுக்காக, ’என் வீடு உங்களுக்கானது’ என்று நாடு நெடுக பாசக்கரங்கள் நீள வாய்ப்பானது. ’தன் மீதான தீர்ப்புக்கு எதிராக ராகுல் ஏன் மேல்முறையீட்டுக்கு முயற்சிக்கவில்லை. இது போங்காட்டம்’ என பாஜகவை புலம்ப வைத்தது. தேர்தல்கள் வரிசைக்கட்டும் காலத்தில், ராகுல் சிறைக்குச் சென்று வெகுமக்கள் அனுதாபங்களை அள்ளுவதை பாஜக விரும்பாததே இதற்குக் காரணம். மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்ட ராகுலின் குரல், மக்கள் மன்றத்தில் இனி தீவிரமாக ஒலிக்கும் என காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது.

மக்களவையில் ராகுல்
மக்களவையில் ராகுல்

ஓரணியில் எதிர்க்கட்சிகள்

அதுவரை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சமமாக விலக்கி வைத்திருந்த ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், ராகுலுக்கு அநியாயம் இழைக்கப்பட்டிருப்பதாக குமுறின. சாவர்க்கர் விவகாரத்தை முன்வைத்து பின்வாங்கிய முன்னாள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, ’நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க மாட்டேன்’ என்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மதில் மேலிருந்து இறங்காத ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டி, மற்றும் ஒடிசாவின் நவீன் பட்நாயக் போன்றோர் தவிர்த்து, சுமார் 17 எதிர்க்கட்சிகள் ஒரே குடையில் திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன.

இந்த இடத்தில், இவையே அரசியல் கூட்டணியாகவும் மாறுமா என்ற எதிர்பார்ப்பையும் அவை ஏற்படுத்தின. அதுவரை பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றான மூன்றாம் அணியை கட்டமைப்பதில் மம்தா பானர்ஜி, உபி அகிலேஷ் யாதவ், தெலங்கானா சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் தீவிரமாக இருந்தனர்.

பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சிதறடிக்கச் செய்து அதன் வெற்றிக்கு உதவுமே அன்றி, மூன்றாவது அணியால் ஆயப்பயன் எதுவும் இல்லை. அந்த வகையில் பாஜகவும் மூன்றாவது அணி உருவாக்கத்தையே நப்பாசையுடன் எதிர்பார்த்திருந்தது. ஆனால், மூன்றாம் அணிக்கான முன்னெடுப்பில் இறங்கியவர்களும், ராகுலுக்காக ஒரே குடையில் திரண்டார்கள். இந்த நெருக்கம் தேர்தல் கூட்டணியாக மாற வாய்ப்பில்லாது போகலாம். ஆனால், தேர்தல் முடிவுகளில் பாஜக அறுதிப் பெரும்பான்மை இழக்க வாய்ப்பானால், தேர்தலுக்கு பிந்தைய புதிய கூட்டணி ஆட்சியாக, பாஜகவுக்கு எதிராக திரள வாய்ப்பாகும். எதிர்க்கட்சிகள் மத்தியிலான தற்போதைய இணக்கம், அடுத்து வரும் சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல்களில் தொடர்ந்தால், மக்களவை தேர்தலுக்கும் ஒரே அணியில் எதிர்க்கட்சிகள் திரண்டு, பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக மாறக்கூடும்.

பாஜக விரித்திருக்கும் வலை

இத்தனையும் உள்ளடக்கி, ராகுலை வலிய வளர்த்துவிடுவதை பாஜக அறியாமையில் செய்யவில்லை; அரசியல் ராஜதந்திரமாகவே இந்த நகர்வுகளை மேற்கொள்கிறது. இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் இருந்து ராகுலின் குரலை வெளியேற்றியதில் பாஜக சாதித்திருக்கிறது. அந்தளவுக்கு மக்களவையில் ராகுல் எழுப்பிய கேள்விகள் பிரதமர் மோடியையும், பாஜக ஆட்சியையும் சங்கடத்துக்கு உள்ளாக்கின. மோடியின் பலவீனம் அதானி என்பதை அறிந்தே, அதனை குறிவைத்து அவையில் தொடர் தாக்குதல்களை நிகழ்த்திய ராகுலின் குரல் இப்போது சுரத்திழந்திருக்கிறது. ராகுல் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கும் கட்டாயத்துக்கு ஆளாவதோ, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு இணங்குவதோ பாஜகவுக்கு நீடித்த சேதாரங்களை தந்துவிடும். அந்தப் பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ராகுலின் வளர்ச்சியை எதிர்கொள்வதே தேவலாம் என்ற நிலையில் பாஜக இருக்கிறது.

ராகுலை வளர்த்து விடும் பாஜகவின் வலையில் இன்னொரு தந்திரமும் அடங்கியிருக்கிறது. தேர்தல் களங்களில் ’மோடி -எதிர்- ராகுல்’ என்று நிறுத்தவே பாஜக விரும்புகிறது. வட மாநிலங்களில் வேகமாக வளர்ந்து வரும் ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவாலை பின்தள்ளவும் இந்த வியூகமே உதவும். மேலும், 2014 மற்றும் 2019 தேர்தல்களில் தென்பட்ட மோடி தற்போது இல்லை. அவரது பிரம்மாண்டத்தின் முன்னே, ராகுலை ஒப்பிட்டு வெகுமக்கள் வாக்குகளை வளைப்பதில் பாஜகவின் அரசியல் தந்திரம் அடங்கியிருக்கிறது. இந்த 9 ஆண்டுகளில் ராகுலும் பல மடங்கு வளர்ந்திருக்கலாம். ஆனால், வெகுமக்கள் வாக்குகளை அறுவடை செய்வதற்கான ஆகிருதியில், மோடியின் பிம்பம் வலிய ஊதப்பட்டிருப்பதின் முன்பாக ராகுல் எடுபடுவது சிரமமே.

மோடி - ராகுல்
மோடி - ராகுல்

பாஜகவின் இந்த பொறிகளில் சிக்காதிருப்பது ராகுலின் சாமர்த்தியம். அதற்கேற்ற வாய்ப்புகளும் காங்கிரஸ் மடி தேடி விழுந்து வருகின்றன. ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுவது முதல் அதானி பூதத்தை கிளப்புவது வரை தேர்தல் நேரத்தில் வலுவாக அம்பலப்படுத்த ராகுல் தரப்பிலும் வியூகங்கள் தயாராகி வருகின்றன. இடைப்பட்ட காலத்தில், கர்நாடகா போன்ற சட்டப்பேரவை தேர்தல்களில் சற்றேனும் காங்கிரஸுக்கு சாதகமான காற்று வீசினால் போதும்; ராகுலை வைத்து ரகிட ரகிட என காங்கிரஸார் எழுந்தாட ஆரம்பித்துவிடுவார்கள்.

அதுவே எதிர்மறையாக மக்கள் அபிமானத்தில் காங்கிரஸ் பிசகினால், அடுத்த தேர்தலுக்குப் பார்க்கலாம் என ராகுலை பாஜக சிறையில் முடக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதற்கேற்ப, தற்போதைய எம்பி பதவி இழப்புக்கு வித்திட்டதைவிட, பலமான வழக்குகளை பாஜக தயாராக வைத்திருக்கிறது. காங்கிரஸ் மட்டுமன்றி எதிர்க்கட்சிகள் எவையும் பாஜகவின் இந்தப் போக்கினை விரும்பாது. ஆளும்கட்சியின் வெற்றி மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் அணி சேர்க்கையும் அவற்றின் வெற்றி வாய்ப்பும் கூட பாஜக நகர்வுகளிலே மறைந்திருக்கிறது. தேசிய அரசியலின் கசப்பான நிஜம் தற்போதைக்கு இதுதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in