இந்தியா கூட்டணி இனி அவ்வளவுதான் என்று பாஜக பரிகசிக்கும் அளவுக்கு மோசமடைந்திருந்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, தற்போது தொகுதி பங்கீட்டில் ஒருமித்த கருத்து ஏற்படும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன. இதனால், பெரும் வெற்றிக்கான வாய்ப்பாக 2024 மக்களவை தேர்தலை எதிர்பார்த்திருந்த பாஜக தற்போது துணுக்குற்றுள்ளது.
பாஜக வெற்றிக்குச் சாத்தியமான பல்வேறு வட மாநிலங்களிலும், இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகம் கண்டு வருகிறது. புத்துயிர் பெற்றிருக்கும் இந்தியா கூட்டணி பாஜகவுக்கு நிச்சயமாக அதிர்ச்சி தரக்கூடியது. எதிர்க்கட்சிகளின் புதிய ஒற்றுமையை பாஜக எப்படி எதிர்கொள்ளும், நிதர்சனத்தில் பாஜக வெற்றியை அது எந்தளவுக்கு பாதிக்கும் என்பது அடுத்த சில வாரங்களில் அரசியல் நகர்வுகளில் வெளிப்பட இருக்கின்றன.
இந்தியா கூட்டணியும் இயல்பான சலசலப்புகளும்
இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஒரே குடையில் இணைந்த கட்சிகளின் முரண்பாடு எதிர்பார்த்ததே. தேசிய அளவிலான தேர்தல் கூட்டணி என்பது வழக்கமாக, ஒரு தேசிய கட்சி தனக்கு இணக்கமான பிராந்திய கட்சிகளை ஒன்று சேர்ப்பதாக இருக்கும். மாறாக, இந்தியா கூட்டணியை பிராந்திய கட்சிகள் ஒன்று திரண்டு கட்டமைத்ததுடன் தங்களில் ஒருவராக பிரதான தேசியக் கட்சியான காங்கிரஸையும் சேர்த்தார்கள். இந்த அடிப்படை வேறுபாடே அதன் இயல்பான சலசலப்புகளுக்கும், உறுதி குறைவான தோற்றத்துக்கும் காரணமானது.
இந்தியா கூட்டணியின் பிரதான நோக்கம் காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவதல்ல; பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏறவிடாமல் தடுப்பது! இப்படி கிளைகளில் இருந்து வேருக்கு செல்லும் வித்தியாசமான கட்டமைப்பில், சிறிய சலசலப்பும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தவே செய்யும். அதுதான் இந்தியா கூட்டணியிலும் இதுவரை நேரிட்டது.
கூட்டணிக்கு அடித்தளமிட்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாஜக பக்கம் தாவியதும், இந்தியா கூட்டணி இனி அவ்வளவுதான் என்று பாஜக கணித்தது. ஆனால், அந்தக் கணிப்பு இப்போது சறுக்கி இருக்கிறது. இழுபறியில் இருந்த டெல்லி, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்குள் இணக்கம் ஏற்பட்டு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
பாஜவுக்கு பங்கம் சேர்க்குமா?
சுமார் 27 கட்சிகளை உள்ளடக்கிய பிரம்மாண்ட கூட்டணியாக உருவான இந்தியா கூட்டணியை கண்டு கவலைப்பட்டதாக காட்டிக்கொள்ளவில்லை. அதற்கேற்ப, ’பிரதமர் வேட்பாளர் முகமே இல்லாதது, பிரதான தேசிய கட்சியான காங்கிரஸை பிராந்திய கட்சிகள் பொருட்படுத்தாதது, பொதுவேட்பாளரை நிறுத்தும் உருப்படியான முடிவுகளுக்கு நகராதது, தொகுதி பங்கீடுக்கே இழுபறியானது’ என பாஜகவால் இகழும் நிலையிலேயே இந்தியா கூட்டணி இருந்தது. வாக்காளர்கள் மத்தியில் சொல்லும்படியான தாக்கம் ஏற்படுத்தாத கூட்டணியை இடது கையால் ஒதுக்கியதாகவே பாஜக வெளியில் காட்டிக் கொண்டது.
ஆனால், உள்ளூர பாஜகவுக்கு உதறலெடுத்தது அதன் செயல்பாடுகளில் வெளிப்பட்டது. இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகள் திடீர் பாய்ச்சல் கண்டது முதல், இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைந்த மாநிலங்களில் ஆபரேஷன் தாமரைக்கு அடிபோட்டது வரை பாஜகவின் பதற்றத்தை வெளிப்படுத்தின. 10 ஆண்டுகால ஆட்சியின் அதிருப்தி வாக்குகள், வேலையின்மை, பொருளாதார சரிவு, பணவீக்கம், விலைவாசி உயர்வு, பெரும் பீடிகையுடன் தொடங்கி சொதப்பலான அதிரடி திட்டங்கள் என வெளிப்படையாக தென்படும் தங்கள் பாதக அம்சங்களை மறைக்க பாஜக தட்டுத்தடுமாறுகிறது.
அயோத்தி ராமரின் அனுக்கிரகம், பெரும்பான்மை வாதத்தின் பெரும் பங்கு ஆகியவற்றோடு எதிர்க்கட்சிகளின் பலவீனத்தையும் பாஜக பெரிதும் நம்பியிருக்கிறது. இவற்றில் கடைசி எதிர்பார்ப்பு தற்போது பொய்த்திருப்பது பாஜகவுக்கு பங்கம் சேர்க்கவே செய்யும்.
காங்கிரஸை கரைசேர்க்கும் கட்சிகள்
மேற்குவங்கத்தின் திரிணமூல் காங்கிரஸ், பஞ்சாப்பின் ஆம் ஆத்மி ஆகிய பிராந்திய கட்சிகள், காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தனி ஆவர்த்தனத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தன. ஆனால், ’வெறும் தொகுதி பங்கீடுக்கான இழுபறி மட்டுமே நீடிக்கிறது, விரைவில் சுமூகம் காண்போம்’ என்ற விளக்கத்துடன் காங்கிரஸ் காத்திருந்தது.
பஞ்சாப்பில் கூட்டணி சாத்தியமில்லை என்றாலும், டெல்லியின் 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் இறுதி உடன்பாடு எட்டியிருக்கிறது ஆம் ஆத்மி. உத்தரப்பிரதேசத்தில் இழுபறி நீடித்த நிலையில் 17 சீட்களை வாரி வழங்கி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, காங்கிரஸை ஆரத்தழுவி இருக்கிறது.
விரைவில் மேற்கு வங்கத்திலும் கூட்டணி உடன்பாடு எட்டப்படும் என காங்கிரஸ் காத்திருக்கிறது. இந்த வரிசையில் ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஹரியாணா, பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், இந்தியா கூட்டணிக்கான தொகுதி பங்கீடு சுமூகமாகி வருகிறது. இங்கெல்லாம் பிராந்திய கட்சி அல்லது கூட்டணி கொடுப்பதை வாங்கிக் கொள்ளும் நிலையில் பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ் இருக்கிறது.
ஆனபோதும் பொது எதிரியான பாஜகவுக்கு எதிரான நகர்வில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறிப்பிடத்தக்க நகர்வை சாத்தியப்படுத்தி வருகின்றன. தங்கள் ஒன்று சேர்வது யாருக்கு சாதகம் என்பதை விட பொது எதிரியான பாஜகவுக்கு பாதகம் சேர்க்கிறதா என்பதில் எதிர்க்கட்சிகள் இப்போது குறியாக இருக்கின்றன. இதன் மூலம், சிதிலமான காங்கிரஸ் கப்பலை பிராந்திய கட்சிகள் இழுத்துக் கரைசேர்க்கவும் வாய்ப்பாகி உள்ளது.
அதிசயம் அரங்கேறுமா?
ஆனால், எதிர்க்கட்சிகள் என்னதான் இப்படி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், பாஜகவின் வெற்றியை அது பாதிக்குமா என்பது கேள்விக்குறியே. பாஜக கோட்டை கட்டும் வெற்றிவாய்ப்புகளில் ஆங்காங்கே ஓட்டைகள் விழக்கூடும். மற்றபடி தற்போதைய சூழலில் பாஜகவின் அறுதிப் பெரும்பான்மைக்கும், அது மூன்றாம் முறையாக ஆட்சி அமைப்பதற்கும் அனுகூலமான காட்சிகளே கண்ணுக்கு எட்டியவரை தென்படுகின்றன. தேர்தல் நெருக்கத்தில், ஏதேனும் அதிசயம் நேர்வதற்கு இணையாக, எதிர்க்கட்சிகளின் சாதிப்போ, பாஜகவின் சொதப்பலோ இந்த கணிப்பை பொய்யாக்கலாம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் புதிய எழுச்சி, பாஜக எதிர்பார்க்கும் அசுர வெற்றிக்கான வாய்ப்புகளை சரிக்கும் போக்கிலேயே தென்படுகின்றன. அப்படி எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனால் பாஜகவில் மோடி - அமித் ஷா தலைமைக்கு எதிராக அதிருப்திகள் கிளம்பும். தேர்தலுக்கு புதிய கூட்டணிகளை அரவணைக்கும் புதிய தலைமைக்கான வாய்ப்பு ஏற்படும். இவை மட்டுமே இந்தியா கூட்டணியின் வெற்றிக் கணக்கில் சேரும்.
அதன் பின்னர் அமையும் பாஜக ஆட்சிக்கு எதிராகவோ அல்லது மாற்று அரசை நிர்மாணிக்கவோ, விசிக தலைவர் திருமாவளவன் சொல்வது போன்று, ’தேர்தலுக்குப் பிந்தைய இந்தியா கூட்டணி இப்போது இருப்பதைவிட பிரம்மாண்டமாக திரள’ வாய்ப்பாகலாம்.
அல்லது ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் நம்புவது போன்று ’2029 தேர்தலில் பாஜகவை நிச்சமாக துடைத்தெறியும் சாத்தியங்களுக்கு 2024 தேர்தல் முடிவுகள் உதவக்கூடும்’. எனவே, பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியேறுவதை தடுக்கும் நோக்கத்துக்கு அப்பால், அதற்கான தொலைநோக்கிலும் 2024 தேர்தல் முடிவுகளை தீர்மானிக்க இந்தியா கூட்டணி புத்துயிர் பெற்றிருப்பது உதவக் கூடும். பாஜக எதிர்பார்க்கும் அசுர பலத்தை இந்தத் தேர்தலில் சிதறடிக்கச் செய்வதும், இந்தியா கூட்டணியின் வெற்றிகளில் ஒன்றாக சேரும்.
குறைந்த பலத்துடனும், கூட்டணிகள் ஆதரவுடனும் ஆட்சியமைப்பது நிச்சயம் தற்போதைய பாஜக தலைமைக்கு அடியாகவே அமையும். அது பாஜக திட்டமிட்டிருக்கும் பெரும் அதிரடி திட்டங்களை அமலாக்குவது முதல், பாஜகவின் தலைமை மாற்றத்துக்கான தேவை வரை பல மாற்றங்களுக்கும் வித்திடக்கூடும்.