எகிறும் பெட்ரோல் - டீசல் விலை: எரியும் வீட்டில் ஆதாயம் தேடும் மத்திய அரசு!

எகிறும் பெட்ரோல் - டீசல் விலை:  எரியும் வீட்டில் ஆதாயம் தேடும் மத்திய அரசு!

அனைவரும் எதிர்பார்த்தது போலவே 5 மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை அடக்கமாக இருந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது தினமும் எகிற ஆரம்பித்திருக்கிறது. இதைக் கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தாலும் அதையெல்லாம் சட்டையே செய்யாமல் இருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசின் கொள்ளை

மத்திய அரசா விலையை ஏற்றுகிறது... எண்ணெய் நிறுவனங்கள்தானே? என்று கேட்கலாம். 5 மாநிலத் தேர்தலுக்காக தொடர்ந்து 4 மாதமாக உயராத பெட்ரோல் விலை, தேர்தல் முடிந்த பிறகு கடந்த 10 நாட்களாக தினமும் உயர்கிறது என்றால் தடுத்ததும், தடுக்காமல் இருப்பதும் யார் என்பது பாமரர்களுக்கும் தெரியத்தானே செய்யும்?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் முறை அமலானது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில். எண்ணெய் நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க இந்த நடைமுறையை கொண்டுவருவதாகச் சொன்னார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். ஆனால், நடந்ததோ வேறு. மூச்சுக்கு முந்நூறு முறை காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளையும் விமர்சிக்கும் பாஜக, காங்கிரஸ் போட்ட இந்த தவறான சாலையில் இப்போது இரண்டு கையையும் விட்டபடி ஜாலியாய் வண்டி ஓட்டுகிறது.

2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையும் மிகமிக குறைந்திருக்க வேண்டும். ஆனால், பாய்ந்து வந்து அதைத் தடுத்தது பாஜக அரசு. பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி விலை குறையாமல் பார்த்துக்கொண்டது. இதன் மூலம் அநியாயமாக 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் வருமானம் ஈட்டியது மத்திய அரசு.

இதுகுறித்து நிதித்துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதன் சுமை மக்கள் மீது விழுகிறபோது, அதில் இருந்து மக்களைக் காப்பாற்றும் விதமாக இந்த கலால் வரியை மத்திய அரசு குறைக்கும் என்றார்கள். ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டிய பிறகும் ஒரு பைசாகூட வரியைக் குறைக்கவில்லை மத்திய அரசு. மாறாக, தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த கட்டுரை எழுதப்பட்ட நாள் கணக்குப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியாக மட்டும் மத்திய அரசு, முறையே 33.00, 24.30 ரூபாய் பறித்துக்கொண்டிருக்கிறது.

மாநில அரசும் மக்களை பிழிகிறது

மத்திய அரசுதான் இப்படி என்றால், மாநில அரசும் சேர்ந்து மக்களைக் கசக்கிப்பிழிகிறது. மதிப்புக்கூட்டு வரி (வாட்) என்ற பெயரில் பெட்ரோலில் லிட்டருக்கு 18 ரூபாயும், டீசலில் 15.20 ரூபாயும் மக்களிடமிருந்து பறிக்கிறார்கள். அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தால் இந்த நிலை மாறும் என்ற எதிர்பார்ப்பைத் திமுக உருவாக்கியது. தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பதாகச் சொன்னது திமுக. வெற்றிபெற்றதும் 3 ரூபாய் விலையை குறைத்தது. கடுமையான நிதி நெருக்கடியிலும்கூட திமுக இதைச் செய்தது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்தான். நியாய உணர்வு கொஞ்சமேனும் இருந்தால், மத்திய அரசு அதைப் பார்த்து 7 ரூபாயாவது பெட்ரோல் விலையைக் குறைத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை.

மாறாக, மாநில அரசு தனது வரியை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் அட்வைஸ் தருகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக வரியை உயர்த்தியது யாரோ அவர்தானே குறைக்க வேண்டும்? மாநில அரசு இந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒரு பைசாகூட உயர்த்தாதபோது, அதைக் குறைக்கச் சொல்வது எந்த ஊர் நியாயம் என்று கேட்கிறார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

ஆனால், தமிழக அரசு மனது வைத்தால் இன்னும் கூட விலையைக் குறைக்க முடியும். வாட் வரியில் இருந்து 3 ரூபாயைக் குறைத்ததுபோல, மத்திய அரசின் கலால் வரியில் தனது பங்காக வருகிற தொகையையும் விட்டுக்கொடுத்தால் மேலும் 3 ரூபாய் விலையை குறைக்க முடியும். ஆனால், மத்திய ஆட்சியாளர்களின் கொள்ளையில் தனக்குரிய பங்கை கேட்டுப் பெறுவதிலேயே குறியாக இருக்கிறது மாநில அரசு. கொள்ளையடிக்கிறார்கள் என்ற வார்த்தை கடுமையானதாகத் தோன்றலாம். வரி என்பது பூவில் இருந்து தேன் எடுப்பதுபோல இருக்க வேண்டுமே ஒழிய, கரும்பில் இருந்து சாறு பிழிவதாக இருக்கக்கூடாது என்பது அறிஞர் அண்ணாவின் புகழ்பெற்ற பொன்மொழிகளில் ஒன்று என்பதை இங்கே நினைவுபடுத்த வேண்டியதிருக்கிறது.

போர் தான் காரணமா?

உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரக் காரணம் என்கிறது மத்தியில் ஆளும் பாஜக. ஆனால், உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதெல்லாம் பெட்ரோல் விலையேற்றம் செய்யாத மத்திய அரசு, குறைந்த பிறகு ஏன் விலையை ஏற்ற வேண்டும் என்று கேள்வி கேட்கின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.

இன்னும் சொல்லப் போனால், உக்ரைன் போரால் இந்தியா கூடுதல் பயனடைந்திருக்கிறது என்பதே உண்மை. போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டதால், அந்நாட்டில் தேங்கிய கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் வாங்கியிருக்கிறது இந்தியா. அந்த அடிப்படையில் பார்த்தால், பெட்ரோல், டீசல் விலையை குறைத்திருக்கத்தான் வேண்டுமே தவிர, உயர்த்த வேண்டிய தேவையே இல்லை.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, தெற்காசிய நாடுகளிலேயே அதிக விலைக்குப் பெட்ரோல் விற்கும் நாடு இந்தியாதான். இந்திய மதிப்பில் ஆப்கானிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 66.99. பாகிஸ்தானில் 62.38, வங்கதேசத்தில் 78.53, பூட்டானில் 86.28, நேபாளத்தில் 97.05. ஆனால், இந்தியாவில் மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோல் 107 ரூபாய். இதைவிடக் கொடுமை பொருளாதாரத்தில் அடிபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் இலங்கையில்கூட பெட்ரோல் விலை (இந்திய மதிப்பில்) லிட்டர் 72.96 ரூபாய்தான். இதிலிருந்தே பாஜகவினர் சொல்வதில் எந்தளவுக்கு உண்மையிருக்கிறது என்பது புரியும்.

நிதி அமைச்சரின் அடுத்த பொய்

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் போராட்ட அறிவிப்பையொட்டி, புதிய காரணம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பெட்ரோலியப் பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் வினியோகிக்கப்பட்டன. அப்படி கொடுத்த பத்திரங்களுக்கு பொதுமக்கள் இப்போதும் பணம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

2026-ம் ஆண்டு வரை எண்ணெய் பத்திரங்களை மீட்பது நீடிக்கும் என்பதால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதே அவர் உதிர்த்த முத்து. அதாவது, பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று சொன்னதோடு மட்டுமின்றி, இன்னும் 5 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மாட்டோம் என்பதுதான் அவரது இறுமாப்புப் பதிலின் சாரம்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அடுத்த பொய் இது என்று விமர்சிக்கின்றன எதிர்க்கட்சிகள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த சீனிவாசனிடம் இதுபற்றிக் கேட்டால், மத்திய அரசின் பித்தலாட்டத்தைப் புட்டுப்புட்டு வைக்கிறார்.

“காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்த பெட்ரோல் பாண்ட்களின் மதிப்பு எவ்வளவு என்பதை 2018 ஆகஸ்ட்டில் இதே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லியிருக்கிறார். அதன்படி, மொத்த பெட்ரோல் பாண்ட்களின் மதிப்பு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்தான். இந்த ஆண்டுதான் அதைத் திரும்பச் செலுத்தும் முயற்சியில் பாஜக அரசு இறங்கியிருக்கிறது.

அதாவது, சுமார் 5 ஆயிரம் கோடியை திரும்பச் செலுத்தியிருக்கிறார்கள். மீதம் செலுத்த வேண்டிய தொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடிதான். ஆனால், கடந்த ஆண்டில் பெட்ரோல் வரியாக மட்டும் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி கிடைத்திருக்கிறது. அதாவது, பாண்ட் தொகை செலுத்துவதற்குத் தேவையான தொகையைவிட, கூடுதல் தொகையை இவர்கள் வருடந்தோறும் வரியாக வசூலிக்கிறார்கள். மொத்தமே 1.30 லட்சம் கோடி மதிப்புள்ள பாண்டுகளைத் திரும்பச் செலுத்த ஆண்டுதோறும் 1.60 லட்சம் கோடி வரி வசூல் செய்வது கொள்ளை இல்லையா?” என்று கேட்கிறார் ஆனந்த் சீனிவாசன்

மேலும், இந்த அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியதற்குக் காரணம், கார்பரேட் வரியைக் குறைத்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்காகத்தான் என்றும் குற்றம் சாட்டுகிறார் அவர்.

மோடி தன்னை பாஜக தலைவராக நினைக்காமல், இருமுறை இந்த நாட்டை ஆள வாய்ப்பு கொடுத்த மக்களின் தலைவராக ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் இந்த அநியாயமான வரிகளை எல்லாம் நீக்கி, பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க முடியும். செய்வாரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in