`தர்ம சங்கடத்தை உருவாக்கி விடாதீர்கள்'- தீர்மானம் போட்ட அன்பில் மகேஷுக்கு உதயநிதி 'குட்டு'

`தர்ம சங்கடத்தை உருவாக்கி விடாதீர்கள்'- தீர்மானம் போட்ட அன்பில் மகேஷுக்கு உதயநிதி 'குட்டு'
உதயநிதியுடன் அன்பில் மகேஷ்

``எனக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிட வேண்டுமென்று இனி யாரும் தீர்மானம் போட்டு தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின்.

நேற்று நடைபெற்ற திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த கூட்டத்தை நடத்தி, தீர்மானம் போட காரணமாக இருந்தவரும் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் இப்படிப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கு மூல காரணமாக இருப்பவர் அன்பில் மகேஷ் தான். உதயநிதியின் உற்ற தோழரான அன்பில் மகேஷ் மூலமாகத்தான் கட்சியில் உதயநிதிக்கான பதவிகள் உறுதி செய்யப்படுகிறது. உதயநிதியை உள்ளே நுழைக்கும் வேலைகளை அன்பில் மகேஷ் தான் தொடர்ந்து கச்சிதமாக செய்து வருகிறார்.

அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவியை வழங்க வேண்டும் என்று முதலில் தீர்மானம் போட்டவரும் அவர்தான். மற்ற மாவட்டங்களில் தீர்மானம் போடச் செய்தவரும் இவர்தான். அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் பேசி உதயநிதிக்கு பதவி வழங்கவேண்டும் என்று தீர்மானம் போட செய்தார். இதனையடுத்தே உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

தற்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்கிற அடுத்த கட்டத்தை நோக்கி திமுகவை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அண்மைக் காலமாக செய்தியாளர்கள் சந்திப்பிலும், கட்சிக்காரர்களிடம் பேசும்போதும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கிட வேண்டும் என்பதை அன்பில் மகேஷ் வலியுறுத்தி வருகிறார். அவருடைய மாவட்டத்திலும் அவருடைய மேற்பார்வையில் இருக்கிற மாவட்டத்திலும் முதலில் இப்படிப்பட்ட தீர்மானத்தை அவர் போடச் செய்திருக்கிறார்.

ஜூன் மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், பல சட்டமன்ற உறுப்பினர்களும் இதனைத் தொடர்ந்து வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் கட்சியின் மாவட்டக் குழு கூட்டத்தில் இப்படிப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றினால் அது அந்தக் கோரிக்கைக்கு மேலும் வலுவாக அமையும் என்பதைத் திட்டமிட்டு அன்பில் மகேஷ் ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

நேற்று பகலில் இப்படிப்பட்ட தீர்மானங்கள் போடப்பட்டு இருக்கும் நிலையில் நேற்று இரவு இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், ``என் மீது உள்ள அன்பு காரணமாக தற்போது எனக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைக்கும் செய்திகள் குறித்து அறிந்தேன். எனது தொடர் பணிகள் குறித்தும், முன்னெடுப்புகள் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், அன்பிற்கும் என்றும் நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன். எனக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கி விட வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அவரது நண்பர் அன்பில் மகேஷும், இல்லை இல்லை அப்படி தீர்மானம் போட்டு தலைமையை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாம் என்று உதயநிதியும் மாறி மாறி கூறிக் கொண்டிருப்பதும், இருவரும் பேசி வைத்துக் கொண்டு செயல்படுவதாகத் தான் தெரிகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in