மதுரையிலும் சசிகலாவை ஆதரித்து தீர்மானம்?

ஓபிஎஸ், உதயகுமார் 3 மணி நேரம் ரகசிய ஆலோசனை
ஆலோசனையின் போது மூடப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு.
ஆலோசனையின் போது மூடப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு.

தேனி மாவட்டம், கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் நேற்று நடந்த கூட்டம் தான் அதிமுகவில் பெரும் பிரளயத்தை உருவாக்கியுள்ளது. "அதிமுகவில் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் சேர்க்க வேண்டும்" என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட விஷயம் தான், தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆலோசனைக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
ஆலோசனைக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மதுரை மேற்கு புறநகர் மாவட்டச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்து பேசியது அதிமுகவினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ணை வீட்டிற்கு காலை 11 மணியளவில் வந்த ஆர்.பி.உதயகுமார் பிற்பகல் 2. 30 மணி வரை ஓ.பன்னீர்செல்வத்துடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது யாரும் வீட்டிற்குள் உள்ளே சென்று விடாமல் இருக்க வாசல் கதவு இழுத்து மூடப்பட்டிருந்தது. 'தேனியைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றுவதற்கான ஆலோசனை உள்ளே நடந்ததா?' என்று அதிமுகவினரிடம் கேட்டதற்கு, 'அதெல்லாம் சஸ்பென்ஸ்' என்றனர்.

நீண்ட நேர ரகசிய ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த ஆர்.பி.உதயகுமார், பத்திரிகையாளர்களைப் பார்த்து பெரிய கும்பிடைப் போட்டு விட்டு காரில் ஏறிச் சென்றார். இந்த சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளிப்பார் என்று காத்திருந்த பத்திரிகையாளர்களும் ஏமாந்து போனார்கள். ஆனால், அதிமுகவிற்குள் ஏதோ நடப்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in