நல்ல படியாக வாதிட்டது தமிழக அரசு: முதல்வரை சந்தித்த அன்புமணி நற்சான்று

நல்ல படியாக வாதிட்டது தமிழக அரசு: முதல்வரை சந்தித்த அன்புமணி நற்சான்று

"வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் நல்ல மூத்த வழக்கறிஞர்கள் நல்லபடியாக வாதிட்டார்கள். நல்ல முறையில்தான் தமிழக அரசு சட்டப் பிரச்சினையை கையாண்டு இருக்கிறது" என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி நற்சான்று கொடுத்தார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையிலான கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, "தமிழக முதல்வர் உடனான சந்திப்பின்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மிக தெளிவாக, தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கலாம். எந்த தடையும் இல்லை. புள்ளி விவரங்களை சேகரித்து சட்டப்பேரவையில் சட்டத்தைக் கொண்டுவந்து மீண்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக் கொண்டோம். முதல்வர் நிச்சயமாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து நல்ல சாதகமான நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கிறார்.

தமிழக அரசு சார்பில் நல்ல மூத்த வழக்கறிஞர்களை வைத்துதான் வாதிட்டார்கள், அபிஷேக் மனுசிங்வி, முகுல் ரோஹ்தகி, ராகேஷ் திவேதி, உச்ச நீதிமன்றம் என்றாலே நல்ல மூத்த வழக்கறிஞர்கள் என்றால் இவர்கள்தான், நல்லபடியாக வாதிட்டார்கள். நல்ல முறையில்தான் தமிழக அரசு இந்த சட்டப் பிரச்சினையை கையாண்டு இருக்கிறது. தமிழகத்தில் ஒரு பெரிய சமுதாயம் மிக பின்தங்கிய நிலையில் இருக்கிறது, இந்த சமுதாயம் முன்னேறினால் தமிழகம் முன்னேறும் அந்த வகையிலே தமிழக முதல்வர் நேற்று சட்டப்பேரவையில் சமூகநீதி குறித்து பேசியிருக்கிறார். எனவே இது யாருக்கும் பாதகமான இட ஒதுக்கீடும் கிடையாது, எதிரான செயலும் கிடையாது. இதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. எந்தெந்த சமூகங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறதோ, அதை முன்னுக்குக் கொண்டு வருவது அரசின் கடமை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in