ஓபிசி, பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு 65% ஆக உயர்வு - பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி!

ஓபிசி, பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு 65% ஆக உயர்வு - பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி!
Updated on
2 min read

பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநில அரசு அண்மையில் நடத்தியது. 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நாட்டில் முதல் முறையாக பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது.

நிதிஷ் குமார் தேஜஸ்வி யாதவ்
நிதிஷ் குமார் தேஜஸ்வி யாதவ்

பீகார் சட்டசபையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன. ஜாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், பீகாரில் 60%க்கும் அதிகமாக பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஆகையால் அவர்களுக்கான இடஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்தார்.

பீகாரில் நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடு விவரம்:

பிற்படுத்தப்பட்டோர்: 30%

ஈபிசி - 18%

ஓபிசி - 12 %

தாழ்த்தப்பட்டோர் : 16%

பழங்குடிகள்: 1%

பிற்படுத்தப்பட்ட பெண்கள்: 3%

மொத்தம் 50% இடஒதுக்கீடு. இதுதான் உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள இடஒதுக்கீடு அளவு. இதில் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு சேர்க்கப்படவில்லை.

தற்போது திருத்தி அமைக்கப்படும் இடஒதுக்கீடு அளவு:

பிற்படுத்தப்பட்டோர்: 43%

தாழ்த்தப்பட்டோர் : 20%

பழங்குடிகள்: 2%

மொத்தமாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு அளவு 65% ஆக உயருகிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டையும் சேர்த்தால் பீகாரில் இடஒதுக்கீடு அளவு 75%ஆகும்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு 69% ஆக உள்ளது. இந்த 69% இடஒதுக்கீடு சட்டத்துக்கு அரசியல் சாசன பாதுகாப்பு வழங்கும் வகையில் ஏற்கனவே ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தில் முட்டி மோதியும் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதர மாநிலங்களின் இடஒதுக்கீடு வழக்குகளில் உச்சநீதிமன்றமானது இடஒதுக்கீடு அளவு 50%க்குள் இருக்க வேண்டும் என தீர்ப்புகள் வழங்கி இருந்தது. இந்த 50% அளவு வரையறையை மாற்ற வேண்டும் என்பது பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in