சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா?

சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா?

சமூக நீதி விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. நீதிக் கட்சி ஆட்சியில் (1927) பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரி அரசாணை (கம்யூனல் ஜி.ஓ.) மூலம் தொடங்கிய இடஒதுக்கீடு, பிறகு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர் ஆகியோரால் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 41 சதவீத இடஒதுக்கீடாக மாறியது. பின்னர் கருணாநிதி ஆட்சியில் அது 49 சதவீதமாகவும், எம்ஜிஆர் ஆட்சியில் 69 சதவீதமாகவும் உயர்ந்தது. பிறகு கருணாநிதி ஆட்சியில் பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்கும், பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் 3.5 சதவீதம் இஸ்லாமியர்களுக்கும் உள்ஒதுக்கீடாக வழங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி அவர்களைக் கை தூக்கிவிடுவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த இடஒதுக்கீடு, சிறப்பாக வேலை செய்திருப்பதை இன்றைய தமிழகத்தின் நிலை காட்டுகிறது. அதே நேரத்தில், 1927-ல் அறிமுகமான இடஒதுக்கீடு அடுத்தடுத்து பல மாற்றங்களைக் கண்டதுபோல, இன்னும் பல மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியதிருப்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன.

உட்பிரிவு தேவை

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இடம்பிடித்திருக்கும் வண்ணார், மருத்துவர் (நாவிதர்), ஒட்டர் உள்ளிட்ட சமூகங்களுடன் ஒப்பிடுகையில் அதேபட்டியலில் உள்ள பிற சமூகங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்வரிசையில் இருப்பதால், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டி உள்ஒதுக்கீடு கேட்கிறார்கள். இதேபோல பட்டியலினப் பிரிவில் வரும் சமூகங்களில் சிலர், தாங்கள் ஆதிதிராவிடர் (பறையர்), தேவேந்திரகுல வேளாளர் (பள்ளர்)களுடன் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கி இருப்பதைச் சுட்டிக்காட்டி உள்ஒதுக்கீடு கோருகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தங்களை முக்குலத்தோரில் ஒருவராகக் கருதினாலும், அந்த சமூகங்களிலேயே தாங்கள் மிகமிகப் பின்தங்கிய நிலையில் இருப்பதாகப் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் கருதுகிறார்கள்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால், அனைவருக்கும் சமநீதி கிடைக்க வேண்டும். சமமானவர்களுக்கு இடையில்தான் சமத்துவம் இருக்கிறது. சமமற்றவர்களைச் சமமாக நடத்துவது, சமமின்மையை நீடித்திருக்கச் செய்வதாகும் என்ற மண்டல் கருத்து இங்கே நினைவுகூரத்தக்கது.

இந்த அடிப்படையில்தான், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை இரண்டாகப் பிரித்து, புதிதாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு (எம்பிசி) உருவாக்கப்பட்டது. பிறகு பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் இருந்து முஸ்லிம்களுக்கு தனியாக 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடாக வழங்கப்பட்டது. இதேபோல புதுச்சேரியில் பிற்படுத்தப்பட்ட பழங்குடிகள், மிகமிக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் என்று 5 பிரிவாக பிரித்துள்ளனர். இப்படி மொத்தம் 15 மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டானது 2 முதல் 5 பிரிவுகளாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தமிழகம் செல்ல வேண்டிய பாதை

கேரளாவோ இன்னும் ஒரு படி முன்னேறி, பிற்படுத்தப்பட்டோருக்கான 40% இடஒதுக்கீட்டை ஈழவர்களுக்கு 14, இஸ்லாமியருக்கு 12, லத்தின் கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர்களுக்கு 4, விஸ்வகர்மாவுக்கு 3, நாடார்களுக்கு 2, மதம் மாறிய தாழ்த்தப்பட்டோருக்கு 1, தீரவர் 1, இதரர்களுக்கு 3 சதவீதம் என்று பிரித்து வழங்கியிருக்கிறார்கள். அதாவது, கேரள மக்கள் தொகையில் 1% கூட இல்லாத சின்னச் சின்ன சமூகங்களும் பாதிக்கப்படக் கூடாது என்று அப்படியான 70 சமூகங்களை ஒன்றுசேர்த்து, தனியாக 3 சதவீதம் ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார்கள்.

இடஒதுக்கீட்டை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்ல வேண்டிய நிலையில் இருக்கும் தமிழ்நாடு, ஒவ்வொரு சாதிக்கும் ஒதுக்கீடு வழங்குவதுதான் அடுத்தகட்ட பாய்ச்சலாக இருக்கும். ஆனால், அப்படி வழங்கப்பட்ட வன்னியர் தனி ஒதுக்கீடு, சர்ச்சைக்குள்ளாகியிருப்பது, தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் சாதிவாரி இடஒதுக்கீடு சாத்தியப்படாது என்பதையே காட்டுகிறது. முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வரையில், அடுத்தகட்டத்துக்கு தமிழகம் நகர முடியாது. ஆனால், இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

கிறிஸ்தவர் இடஒதுக்கீடு

தமிழகத்தில் இருக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் மக்கள் தொகை சதவீதத்தைவிட அதிக இடஒதுக்கீட்டுப் பயன்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெறுகிறார்கள். அதாவது, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் மற்றவர்களுக்கான வாய்ப்புகளையும் அவர்களே தட்டிப் பறிக்கிறார்கள் என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. இதை நிரூபிக்க நாடு தழுவிய அளவில் சாதி மற்றும் பொருளாதார கணக்கெடுப்புகள் கூட தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு மாவட்டத்தில் 10 அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள ஆசிரியர்களில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எத்தனை என்று பார்த்தால், ஆசிரியர் எண்ணிக்கையில் குறைந்தது நான்கில் ஒரு பங்கினர் கிறிஸ்தவர்களாக இருப்பதைக் காணமுடியும். பிற்படுத்தப்பட்டோருக்கு மொத்தமே 26.5 சதவீதம் மட்டும் ஒதுக்கீடு உள்ள நிலையில், அதிலுள்ள இடங்களையும் கிறிஸ்தவர்களே எடுத்துக்கொள்கிறார்கள் என்பது மறுக்க முடியாத குற்றச்சாட்டு.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்குத் தலா 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை கடந்த 2008-ம் ஆண்டு பிறப்பித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, நன்றி சொன்னார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், கிறிஸ்தவ தலைவர்களோ முதல்வரைச் சந்தித்து அதை ரத்துசெய்யக் கோரினார்கள். காரணம், அந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தால், தாங்கள் தற்போது அனுபவித்துவரும் ஏகபோக இடஒதுக்கீட்டு உரிமையை அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சுருக்கிவிடும் என்று சொன்னார்கள். அதை ஏற்று கிறிஸ்தவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து, அவர்கள் ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருப்பதால் அந்தச் சலுகையை அப்படியே அனுபவிக்க வழி செய்தது திமுக அரசு.

இப்படி பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் கணிசமான இடத்தைப் பிடிக்கும் கிறிஸ்தவர்கள், மதச் சிறுபான்மையினர் என்ற பெயரில் தாங்கள் நடத்துகிற அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் (ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்குவது அரசு), இடஒதுக்கீட்டை முறையாகக் கடைபிடிப்பதில்லை. குறிப்பாக, பி.சி ஒதுக்கீட்டுக்கான இடங்களில் முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களையே அவர்கள் நியமிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. அவர்கள் நடத்துகிற சுய நிதிக் கல்வி நிறுவனங்களிலும் இதுதான் நிலை.

சுயநிதி தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தேவையில்லை என்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரி செய்வதற்காக 2006-ல் மத்திய அரசு ஒரு சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்த இட ஒதுக்கீட்டில் இருந்து சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு விதி விலக்கு அளிப்பதாகவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிவிலக்கை அன்றைய எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக எதிர்த்தது. ஆனால், இன்று ஆளுங்கட்சியாக இருந்தாலும் அதுதொடர்பில் எந்த சட்ட திருத்தத்தையும் அது முன்னெடுக்காதது ஆச்சரியமளிக்கிறது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட்டதற்கு எதிராக, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் சமூக, அரசியல் பத்திரிகையான நம் வாழ்வு வார இதழ் 22.1.2006-ல் தலையங்கம் எழுதியது. ‘பாஜக தவிர்த்த அரசியல் கட்சிகள் சிறுபான்மையினரின் உரிமை என்ற சித்தாந்த அடிப்படையில் இச்சலுகையைத் தாராளமாக வழங்கினாலும், சிறுபான்மையினராகிய நாமே முன்வந்து இவ்விதிவிலக்கு எங்களுக்குத் தேவையில்லை. சமூக நீதியை வென்றெடுக்கும் யுத்தத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம் என்று சொல்ல வேண்டும். சிறுபான்மை நிறுவனம் என்ற பெயரில், தனியார்கள் சிலர் அடிக்கும் பகல் கொள்ளையிலிருந்து நாட்டைக் காக்க கிறிஸ்தவத் தலைவர்களும், சமூகச் சிந்தனையாளர்களும் ஓரணியில் சேர வேண்டும்’ என்றும் வலியுறுத்தியது அந்தத் தலையங்கம்.

எஸ்.கே.கார்வேந்தன்
எஸ்.கே.கார்வேந்தன்

இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் எம்பியும், தற்போதைய பாஜக ஓபிசி பிரிவின் நிர்வாகியுமான எஸ்.கே.கார்வேந்தனிடம் கேட்டபோது, "2006-ல் மத்திய காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்தில் தேவையே இல்லாமல், அடைப்புக்குறிக்குள் ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நீங்கலாக’ என்று குறிப்பிட்டுவிட்டார்கள். இது ஓபிசி மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அரசமைப்புச் சட்டம் 15(4)-ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எல்லா கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பெறலாம் என்று இருக்கிறது. அரசு, தனியார், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். ஆக, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை ஒழித்தது காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசுதான். இது மிகப்பெரிய துரோகம். சிறுபான்மை கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டு முறையை கட்டாயமாக்க வேண்டும்" என்றார்.

"காங்கிரஸ் அரசு தவறு செய்திருக்கலாம். அதன் பிறகு 7 ஆண்டாக பாஜக ஆட்சிதானே நடக்கிறது. ஏன் மறுபடியும் திருத்தம் கொண்டுவரவில்லை?" என்று அவரிடம் கேட்டபோது, "தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினராக உள்ள பலர், 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு படித்தவர்கள்தான். அசோக்குமார் தாக்கூர் வெர்சஸ் யூனியன் கவர்மென்ட் ஆஃப் இந்தியா என்ற வழக்கில், 700 பக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பே இருக்கிறது. அதைப் படித்துப்பார்த்து கருத்துச் சொல்வதற்கு முதலில் இவர்களுக்குத் தெரிய வேண்டுமே? எடுத்துச் சொல்வதற்கு ஆளில்லை. இருந்தாலும் நான் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன்" என்றார்.

சுப.வீரபாண்டியன்
சுப.வீரபாண்டியன்

“சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி, சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் சமூகநீதிக் கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்றும், இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதுடன், அது சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும்” என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அந்தக் குழுவின் தலைவராக சுப.வீரபாண்டியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். உறுப்பினர்களாக கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

பொறுப்பேற்ற கையோடு, அரசு உதவிபெறும் அனைத்து நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்போவதாகப் பேட்டி கொடுத்திருக்கிறார் சுப.வீரபாண்டியன். கண்காணிப்போடு நின்றுவிடாமல் அரசின் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in