உத்தராகண்ட் சுரங்கத்தில் 8வது நாளாக மீட்புப்பணி; முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உத்தராகண்ட் சுரங்கத்தில் 8வது நாளாக மீட்புப்பணி; முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை!

உத்தராகண்ட்டில் மண்சரிவு ஏற்பட்ட சுரங்கப்பாதைக்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க எட்டு நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மீட்புப் பணிகள் குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி மீட்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்- யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.அந்தப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த 12-ம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளர்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சுரங்கத்தின் உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மற்றொரு குழாய் வழியாக அவர்களுக்கு திரவ உணவும் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில், மீட்புப் பணிகளை விரைவுபடுத்த ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து விமானப் படையின் சி17 விமானம் மூலமாக ஏற்கெனவே மற்றொரு துளையிடும் இயந்திரமும் சில்க்யாரா பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. துளையிட்டுக் கொண்டிருந்த நிலையில் இயந்திரத்தில் சத்தம் வந்ததால் துளையிடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இந்நிலையில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக பிரதமரின் முன்னாள் ஆலோசகர் பாஸ்கர் குல்பே வந்துள்ளார்.

அவர் கூறும்போது, “மத்திய பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இயந்திரம் மூலம் செங்குத்தாக துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களை மீட்க ஒரு திட்டம் மட்டுமல்லாமல் வேறு சில திட்டங்களையும் செயல்படுத்த நாங்கள் ஆலோசித்து வருகிறோம். மீட்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால் தொழிலாளர்கள் 4 அல்லது 5 நாட்களில் மீட்கப்படுவார்கள்” என்றார்.

இந்நிலையில் சுரங்கப்பாதை மீட்பு பணிகளை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் மீட்பு பணிகள் குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறும்போது, “ஒவ்வொருவரின் உயிரையும் காப்பதே எங்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். இதனால் மீட்பு படைகளுக்கு தேவையான அனைத்துஉதவிகளையும் செய்ய மாநில அரசு தயாராக உள்ளது. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.

சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க எட்டு நாட்களாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளும், உலர் பழங்களும் குழாய் வழியாக அனுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து உத்தராகண்ட் மாநில சாலை, போக்குவரத்துத்துறை செயலர் அனுராக் ஜெயின் கூறும்போது, “தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதியில் மின்சார வசதி இருப்பதால் அங்கு அவர்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளது.

உத்தராகண்ட் சுரங்க விபத்து - தொழிலாளர்களை மீட்க 5 அம்ச திட்டம்
உத்தராகண்ட் சுரங்க விபத்து - தொழிலாளர்களை மீட்க 5 அம்ச திட்டம்

மேலும் அங்கு செல்லக்கூடிய குழாயில் தண்ணீரும், திரவு உணவும் அனுப்பி வருகிறோம். மேலும் அவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், உலர் பழங்களையும் அனுப்பி வருகிறோம்” என்றார்.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். 41 தொழிலாளர்களை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மத்திய அரசு தேவையான உபகரணங்கள் வழங்கி வருவதாகவும் மீட்பு பணியில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in