கலவரத்தால் மூடப்பட்ட அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றம்!

கலவரத்தால் மூடப்பட்ட அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றம்!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் இன்று அகற்றப்பட்டது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் கடந்த 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் காவல்துறையினர் காயமடைந்தனர். மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து அலுவலகத்தை திறக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவர் தரப்பிலும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அத்துடன் ஒரு மாத காலத்திற்கு அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் இன்று அகற்றப்பட்டது. சி.வி. சண்முகம் எம்.பி முன்னிலையில், மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெக ஜீவன் ராம் சீலை அகற்றினார். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in