சசிகலாவை நீக்கியது செல்லும்: ஓபிஎஸ், ஈபிஎஸ் வழக்கில் அதிரடி தீர்ப்பு

சசிகலாவை நீக்கியது செல்லும்: ஓபிஎஸ், ஈபிஎஸ் வழக்கில் அதிரடி தீர்ப்பு

"சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது செல்லும்" என சென்னை உரிமையியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துளளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அதிமுகவின் பொதுச் செயலாளராக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, முதல்வராக பதவியேற்க சசிகலா ஆயத்தமாகிய நிலையில், ஓபிஎஸ் திடீரென தர்மயுத்தம் என்ற பெயரில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். முன்னதாக, டி.டி.வி.தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார் சசிகலா.

இந்த சூழ்நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டு சேர்ந்து சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக களமிறங்கினர். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக் குழு கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டது. அப்போது, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவையும், துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரனையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். ஆனால், அன்றைய தினம் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது செல்லும் என அறிவித்ததோடு, சசிகலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in