‘இந்துக்களின் மதமாற்றத்தை 100 நாட்களில் நிறுத்தியுள்ளோம்’ - கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

‘இந்துக்களின் மதமாற்றத்தை 100 நாட்களில் நிறுத்தியுள்ளோம்’ - கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

கோவாவில் தனது அரசு பதவியேற்ற 100 நாட்களுக்குள் இந்துக்களின் மதமாற்றம் நிறுத்தப்பட்டதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக பாஜகவின் சார்பில் கோவா முதல்வராக பதவியேற்றுள்ள பிரமோத் சாவந்த் தற்போது ஆட்சியின் 100 நாட்களை நிறைவுசெய்துள்ளார். இதற்காக பனாஜியில் நடந்த '100 நாட்கள் அதிரடி' என்ற விழாவில் தனது அரசாங்கத்தின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், “ எங்கள் அரசு மதமாற்ற விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் பதவியேற்ற 100 நாட்களுக்குள் இந்துக்களின் மதமாற்றத்தை நாங்கள் தடுத்துவிட்டோம். எனவே பல ஆண்டுகளாக கோவாவில் தொடர்ந்து நடக்கும் மதமாற்றங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போர்ச்சுகீசியர் காலத்தில் அழிக்கப்பட்ட கோயில்கள் மற்றும் பாரம்பரிய இடங்களை புனரமைக்க பாஜக அரசு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சட்டவிரோத நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தை விசாரிக்க நாங்கள் எஸ்ஐடியை அமைத்துள்ளோம். சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை, அனைத்து வகையான அனுமதிகளையும் புதுப்பிக்க ஆன்லைன் ஒப்புதல் மற்றும் பதிவு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில் முனைவோர் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக இந்த சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. மூன்று கரோனா அலைகளால் பாதிக்கப்பட்ட போதிலும், கோவாவின் சுற்றுலாத் துறை நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது, மார்ச் 2022 முதல் மே 2022 வரை 19,40,683 உள்நாட்டு பயணிகள் மற்றும் 33,841 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோவாவிற்கு வருகை தந்துள்ளனர்" என தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியின் போது மறுசீரமைக்கப்பட்ட பொதுக் குறைகேட்பு போர்ட்டல் மற்றும் பல அரசுத் திட்டங்களுக்கு எஸ்எம்எஸ் சேவையைத் தொடங்கிவைத்த பிரமோத் சாவந்த். பயனாளிகளுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமை சாசனத்தை வழங்கினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in