மத அரசியல் ஒத்துவரவில்லை; பாஜகவில் இருந்து விலகுகிறேன்: திமுகவில் இணைகிறார் டாக்டர் சரவணன்

மத அரசியல் ஒத்துவரவில்லை; பாஜகவில் இருந்து விலகுகிறேன்: திமுகவில் இணைகிறார் டாக்டர் சரவணன்

மத அரசியல் ஒத்து வராததால் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அதிரடியாக அறிவித்துள்ளார். விரைவில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்ற போது அவரது காரின் மீது காலணி வீசப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் நேற்று நள்ளிரவு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது வீட்டில் சந்தித்து நடந்த சம்பவத்திற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று காலை உயிரிழந்த தமிழக வீரர் லட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாஜக மாவட்ட தலைவர் என்ற முறையில் சென்றிருந்தேன். அப்போது அமைச்சர் என்ன தகுதியின் அடிப்படையில் வந்தீர்கள் எனக் கேட்டார். அந்த நேரத்தில் இதை பெர்ஷனலாக எடுத்துவிட்டோம். இதன்பின் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிட்டது.

வீட்டுக்குச் சென்ற பிறகு இந்த சம்பவம் மன உறுத்தலாக இருந்தது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்தவர் என்பதால் அவருடைய தமிழில் விமான நிலையத்தில் பேசினார். அரசின் நெறிமுறைகள்படி, அரசை சார்ந்தவர் தான் விமான நிலையத்திற்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதை எந்த தகுதி என்ற அர்த்தத்தில் பேசி இருக்கிறார். நான் உட்பட அங்கிருந்த பாஜக தொண்டர்கள் அனைவரும் அந்த நேரத்தில் இது புரியாமல் தனிமனித தாக்குதலாக எடுத்துக்கொண்டோம்.

எனது குடும்பம் சுயமரியாதை மற்றும் திராவிட பின்னணியில் இருந்து வந்தவர்கள். கடந்த ஒரு வருடத்துக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தேன். பாஜகவில் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு போக்கு நடந்துகொண்டே உள்ளது. இந்த மனஉளைச்சலோடு அந்தக் கட்சியில் பயணித்து கொண்டிருந்தேன். நிறைய இடங்களில் இதை வெளிப்படுத்தியும் இருக்கிறேன். இந்த மாதிரியான நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது மிகப்பெரிய மனஉளைச்சலை கொடுத்தது. இதனால் தூக்கம் வரவில்லை. யோசித்து பார்த்தேன். அமைச்சருக்கு போன் செய்து உங்களை பார்க்க வேண்டும் என்று கேட்டேன். இது நான் அடிக்கடி வந்துசென்ற எனது தாய் வீடுதான். இங்கு வந்து எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் அமைச்சரிடம் தெரிவித்தேன்' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், " இதற்கு முன் கார்கில் சண்டையின்போது இதேபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்போது நான் எம்எல்ஏவாக இருந்தேன். அதனால் வீரருக்கு அஞ்சலி செலுத்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இன்றைக்கு நானும் ஒரு பொதுமனிதன் தான். விமானநிலையத்தில் நான் இருந்திருக்ககூடாது. என்றாலும், எனக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அஞ்சலிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், தொண்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து நடந்துகொண்டது வேதனையாக இருந்தது. அந்தநேரத்தில் இருந்த உணர்ச்சியில் அப்படி செய்துவிட்டார்கள். இதை அமைச்சரிடம் விளக்கமாக சொன்னேன். அவரும் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.
ஆரம்பத்தில் இருந்து சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்த நான், இந்த மாதிரியான அரசியலை செய்வதற்கு ஒரு ஆளாக இருந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் அமைச்சரை நேரில் சந்தித்தேன். இப்போது எனது மனம் நிம்மதியாக இருக்கிறது. வீட்டிற்கு சென்று நிம்மதியாக தூங்குவேன்" என்றார்.

"பதவியை விட மன அமைதி முக்கியம். இனி பாஜகவில் தொடர மாட்டேன். மத அரசியலும், வெறுப்பு அரசியலும் எனக்கு பிடிக்கவில்லை, ஒத்தும் வரவில்லை. பாஜகவில் இருந்து விலகுவதற்கு இன்று நடந்த சம்பவம் மட்டுமல்ல, தொடர்ச்சியான மன உளைச்சலும் ஒரு காரணம். இதை அமைச்சரிடம் தெரிவித்து, எனது மனதில் இருப்பதை அவரிடம் கொட்டினேன். நாளை( இன்று) எனது ராஜினாமா கடிதத்தை பாஜகவுக்கு அனுப்புவேன். திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் கூறாமல் செய்யமாட்டேன். திமுகவில் இணைந்தாலும் தப்பில்லை. திமுக என் தாய் வீடு தானே? 15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக" என்றார். டாக்டர் சரவணன் பாஜவிற்கு ராஜினாமா கடிதம் கொடுத்தபின், திமுகவில் இணைவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in