
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலுமணி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு முன்வு விசாரணைக்கு வந்தன.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், "வழக்கு ரத்து கோரிய மனுக்களை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும். வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், மத்திய அரசுக்கு ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான ராஜு, இந்த வழக்கில் எப்படி ஆஜராகலாம்?'' என வாதிட்டார்.
வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, ''மத்திய அரசின் அனுமதி பெற்றே, இவ்வழக்கில் ஆஜராகிறேன். அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொதுநல வழக்குடன் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரித்ததால் வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுக்களையும் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம்'' என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என அட்வகேட் ஜெனரல் கூறுவதை ஏற்க முடியாது. அவ்வாறு விசாரித்தால் மாறுபட்ட கருத்துக்கள் எழலாம். அதனால் தான் வழக்கு ரத்து கோரிய மனுக்களை பொதுநல வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிடும்படி உத்தரவிடப்பட்டது. இந்த வழக்குகளை முதல் அமர்வு விசாரிப்பதற்கு அட்வகேட் ஜெனரல் தெரிவித்த ஆட்சேபணையில் நியாயம் இல்லை.
மத்திய அரசு சார்பில் ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, இவ்வழக்கில் வேலுமணிக்கு ஆஜராகவும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ராஜுவுக்கு வழங்கப்பட்ட அனுமதியின்படி அவர் ஆஜராகிறார். அவர் ஆஜராவதற்கு ஆட்சேபணை தெரிவிப்பதை ஏற்க முடியாது. அது, நிராகரிக்கப்படுகிறது" என்று கூறினர்.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், வேலுமணி மீதான வழக்கை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்க தடை விதிக்க மறுத்துவிட்டது. வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனக் கூறியுள்ளது.