மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் ஆட்சி மாற்றம்?: ஆளும் கட்சியை நெருங்கும் பாஜக!

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஜார்க்கண்டிலும் ஆட்சி மாற்றம்?: ஆளும் கட்சியை நெருங்கும் பாஜக!

மகாராஷ்டிராவிற்குப் பிறகு ஜார்க்கண்டிலும் ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இங்கு காங்கிரஸ் ஆதரவுடன் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), பாஜகவுடன் நெருக்கம் காட்டத் துவங்கி உள்ளது.

ஜார்க்கண்டில் ஜேஎம்எம் தலைமையிலான மெகா கூட்டணியின் ஆட்சி அமைந்துள்ளது. இதன் உறுப்பினர்களாக காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவளித்துள்ளன. ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆளும் கூட்டணியிடம் 53 உள்ளன. இதில் ஜேஎம்எம் 30, காங்கிரஸ் 16, ஆர்ஜேடி மற்றும் தேசியவாதக் காங்கிரஸ் தலா 1, சுயேச்சை 2 இடம் பெற்றுள்ளன. எதிர்கட்சியான பாஜகவிடம் 25 இடங்கள் மட்டுமே உள்ளன.

கடந்த இரண்டரை வருடங்களாகத் தொடரும் இந்த மெகா கூட்டணி ஆட்சிக்கு கடந்த மாதம் சிக்கல் ஏற்பட்டது. இங்கு ஒரு உறுப்பினர் பதவிக்கு வந்த மாநிலங்களவை தேர்தலில் இதை கேட்ட காங்கிரசுக்கு ஜேஎம்எம் மறுப்பு தெரிவித்தது. இதற்கு முன்பாக ஜார்க்கண்டின் சுரங்கங்களை முதல்வர் சோரன் மற்றும் அவரது குடும்பத்தார் ஏலத்தில் எடுத்ததாகப் புகார் எழுந்தது. இதில், காங்கிரஸ் சார்பில் முதல்வர் சோரனுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை.

ஹேமந்த் சோரன்.
ஹேமந்த் சோரன்.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்காகவும் தொடுக்கப்பட்ட இந்த விவகாரத்தில் சோரனின் முதல்வர் பதவி ஆபத்தில் உள்ளது. இப்பிரச்சினையில் தனது முதல்வர் பதவியை பாஜகவால் மட்டுமே காக்க முடியும் என சோரன் நம்புகிறார். குடியரசு தேர்தலில் பழங்குடியான திரௌபதி முர்முவை நிறுத்தியதன் மூலம் பாஜகவின் செல்வாக்கு அப்பகுதியில் 2024 மக்களவை தேர்தலில் கூடும் எனவும் முதல்வர் சோரன் அஞ்சுகிறார்.

கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலில் பழங்குடிக்கான 28 தொகுதிகளில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைத்தன. பாஜகவால் 2- ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஜேஎம்எம் கட்சியிடம் ஆதரவளிக்கும்படி காங்கிரஸ் கேட்டிருந்தது. இதற்கு மறுத்த ஜேஎம்எம், ஆளும் மத்திய அரசின் வேட்பாளரான திரௌபதி முர்முவிற்கு ஆதரவை அளித்துள்ளது. இதற்கு சற்றுமுன், மத்திய உள்துறை அமைச்சரை முதல்வர் ஹேமந்த் சோரன் டெல்லியில் சந்தித்து பேசியதும் முக்கியத்துவம் பெறுகிறது.

எனவே, மகாராஷ்டிராவை அடுத்து பாஜகவின் குறி ஜார்க்கண்ட் அரசியலில் பதிந்திருப்பதாகக் கருதப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் கூட்டணியிலிருந்து ஜேஎம்எம் வெளியேறும் வாய்ப்புகள் உள்ளன. இதன்மூலம், துணை முதல்வர் பதவியையும் பாஜக பெறும் சூழல் தெரிகிறது. இங்கும் தனது சூட்சம அரசியலை அரங்கேற்றிய பின் பாஜக அடுத்து காங்கிரஸிடம் மீதம் உள்ள மாநிலங்களில் ஒன்றை குறி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கு முன் உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூரிலும் பாஜகவால் காங்கிரசுக்கு இந்தநிலை ஏற்பட்டிருந்தது.

கடைசியாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் தோல்வியால் உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை. தன்னிடம் இருந்த பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது காங்கிரஸ். இக்கட்சிக்கு முக்கிய மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் தனது அடையாளத்தையே இழக்கும் நிலை உருவாகி விட்டது.

இதற்கு முன் கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் தனது செல்வாக்கை காங்கிரஸ் இழந்தது. தமிழகத்தில் தன் தோழமைக் கட்சியான திமுகவால் செல்வாக்கைக் காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸின் இந்தநிலை 2014-ல் பிரதமராக நரேந்திர மோடி அமர்ந்தது முதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்த வருடம் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸுக்கு சவாலாகி விட்டது. இதில், அக்கட்சி தேறவில்லை. எனில் 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜகவின் கை ஓங்குவது தொடரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in