காலை முதல் வீடுகளில் அதிரடி ரெய்டு: மேற்குவங்க அமைச்சர்களை குறிவைக்கும் அமலாக்கத்துறை

காலை முதல் வீடுகளில் அதிரடி ரெய்டு: மேற்குவங்க அமைச்சர்களை குறிவைக்கும் அமலாக்கத்துறை

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர்கள் இருவரின் வீடுகளில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்துகிறது.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள மாநில தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டிலும், கூச் பெஹாரில் உள்ள கல்வி அமைச்சர் பரேஷ் சந்திர ஆதிகாரியின் வீட்டிலும் இன்று சோதனை நடைபெறுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் 13 இடங்களில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜாதவ்பூர் பகுதியில் உள்ள மேற்கு வங்க தொடக்கக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் மாணிக் பட்டாச்சார்யாவின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே அரசு நிதியுதவி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் குரூப்-சி மற்றும் டி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை நியமிப்பதில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

அமைச்சர் சாட்டர்ஜியின் வீட்டில் ஏற்கெனவே ஏப்ரல் 26 மற்றும் மே 18 ஆகிய தேதிகளில் இரண்டு முறை சிபிஐ விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறை சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பரேஷ் சந்திர ஆதிகாரி, “அவர்கள் இன்று வீட்டிற்கு வருவதைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. தியாகிகள் தினப் பேரணி தொடர்பாக நான் கொல்கத்தாவில் இருக்கிறேன். நான் வீட்டில் இருந்திருந்தால் அவர்களுக்கு முரி (பஃப்டு ரைஸ்) கொடுத்திருப்பேன்” என கிண்டலாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in