தகுதிக்குப் பொருந்தாத ஆளுநர் ரவியை திரும்பப்பெற வேண்டும்:  நவாஸ்கனி எம்.பி வலியுறுத்தல்

நவாஸ்கனி எம்.பி
நவாஸ்கனி எம்.பி

 தகுதிக்குப் பொருந்தா வகையில், பாஜகவின் பிரதிநிதியாகவே செயல்பட்டு வரும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நவாஸ் கனி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனி அறிக்கையில், "தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை எந்தவித மாறுதல், திருத்தமின்றி வாசிப்பது தான் ஆளுநர் உரையின் மரபு. அரசமைப்புச் சட்டம் அவருக்குத் தந்த உரிமைப்படி தமிழ்நாடு அரசின் செயல் திட்டங்களை முன்மொழிவது மட்டுமே அவரது கடமை. ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் இன்று அத்தகைய மரபை மீறி தகுதிக்கு பொருந்தாமல் தனது செயல்பாட்டை ஆளுநர் ரவி  வெளிப்படுத்தி உள்ளார். 

திராவிட மாடல் ஆட்சி என்ற வார்த்தையை உச்சரிக்காமல், பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை வாசிக்காமல், தமிழ்நாடு அமைதிப்பூங்கா, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து உள்ளார். இது அவரது உள்நோக்கத்தை பிரதிபலிக்கிறது. வரம்பு மீறி செயல்படும் அவரது இத்தகைய செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழக மக்களை அவமதிக்கும் செயலை ஆளுநர் ரவி வெளிப்படுத்தி உள்ளார். 

தமிழ்நாடு அரசு ஏற்கெனவே நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்களைக் கிடப்பில் போட்டு, தனது பணியை மறந்து செயல்படும் ஆளுநர், சட்டப்பேரவையின் மரபை தற்போது மீறி தனது தகுதியை மறந்து செயல்பட்டு வருவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு உகந்ததல்ல. இதனால், தகுதிக்குப் பொருந்தாத ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in