குஜராத்தில் இருந்து அசாமுக்கு பறந்த அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள்: உத்தவ் தாக்கரே அரசு என்னவாகும்?

குஜராத்தில் இருந்து அசாமுக்கு பறந்த அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள்: உத்தவ் தாக்கரே அரசு என்னவாகும்?

சிவசேனா கட்சிக்கு எதிராக இயங்க தொடங்கியுள்ள, அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து இன்று அதிகாலை விமானம் மூலம் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றனர்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர்களில் ஒருவரான மகாராஷ்டிர சிவசேனா அமைச்சர் சந்தீபன் பூமாரே ஒரு தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேசுகையில், "சிவசேனா தலைமை மீது எங்களுக்கு வருத்தம் இல்லை, ஆனால் என்சிபி மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் கோரிக்கைகளை அந்த அமைச்சர்களிடமிருந்து பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. ஒரு மக்கள் பிரதிநிதியாக மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த இரண்டு கூட்டணிக் கட்சிகளால் என்னால் அதைச் சரியாகச் செய்ய முடியவில்லை" என்று கூறினார்.

இதற்கிடையில், சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் ஷிர்சாத், 35 சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கவுகாத்தியில் இருப்பதாக ஒரு டிவி சேனலுக்கு தெரிவித்தார். மேலும், "இன்று மாலைக்குள் இன்னும் இரண்டு எம்எல்ஏக்கள் எங்களுடன் இணைவார்கள். எங்களுக்கு மூன்று சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவும் உள்ளது" என்று அவர் கூறினார்.

இத்தகைய சூழலில் பிரஹர் ஜனசக்தி கட்சியின் தலைவரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர் குழுவை சேர்ந்தவருமான மகாராஷ்டிர அமைச்சர் பச்சு காடு, 33 சிவசேனா மற்றும் மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்களுடன் இருப்பதாகவும், இந்த எம்எல்ஏக்கள் எண்ணிக்கை விரைவில் 50 ஆக உயரும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிர சட்டசபையில் தனிக் குழுவை உருவாக்கப் போவதாகவும், தங்களுடன் பாஜக தலைவர்கள் தொடர்பில் இருப்பதையும் ஒப்புக்கொண்டார்.

மேலும், "முதல்வர் உத்தவ் தாக்கரே எங்களை அழைத்து பேசி வருத்தம் அடைந்தார். நீங்கள் திரும்பி வாருங்கள், நாம் விவாதிப்போம் என்று கூறினார். சில எம்எல்ஏக்களை வலுக்கட்டாயமாக சூரத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறுவது உண்மையல்ல, நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம், மகிழ்ச்சியாக இருக்கிறோம், எங்கள் சொந்த விருப்பப்படி இங்கு இருக்கிறோம்" என்று அவர் கூறினார். இந்த சூழலில் சிவசேனா மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அரசமைக்க வேண்டும் என அக்கட்சியின் எம்எல்ஏ பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்டிர சட்டசபையில் மொத்தமுள்ள 288 இடங்களில், ஒரு சிவசேனா எம்எல்ஏ இறந்ததால் தற்போதைய எண்ணிக்கை 287 ஆக உள்ளது. இதில் பெரும்பான்மைக்கு 144 இடங்கள் தேவை. இதில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் 55 சிவசேனா உறுப்பினர்கள், 53 என்சிபி மற்றும் 44 காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளனர், இக்கூட்டணியின் பலம் 152 ஆக இருந்தது. பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகளின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in