கருணாநிதியுடன் ராஜ கண்ணப்பன்...
கருணாநிதியுடன் ராஜ கண்ணப்பன்...

சாதியைச் சொல்லி திட்டியது மட்டும் காரணமல்ல..!

ராஜ கண்ணப்பன் டம்மியாக்கப்பட்டதன் பின்னணி

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைகளில் அடிபட்டு வந்த போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் வேறு இலாகாவுக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார். முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சாதியைச் சொல்லி திட்டியதாக எழுந்த புகாரில் அவர் இலாகா மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ராஜ கண்ணப்பன் கட்டம் கட்டப்பட்டதன் பின்னணியில் வேறு விவகாரங்கள் இருப்பதாக கோட்டையிலும், அறிவாலயத்திலும் தகவல்கள் அலையடிக்கின்றன.

அதிமுகவில் பவர்ஃபுல்

கடந்த 30 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் அறிமுக அமைச்சராக எஸ்.கண்ணப்பனை (இன்றைய ராஜ கண்ணப்பன்தான்) போல முக்கிய இலாகாக்களைப் பெற்ற ஒருவரை கைகாட்டுவது அரிது. 1991-ல், ஜெயலலிதா முதன் முறையாக ஆட்சி அமைத்தபோது அந்த அமைச்சரவையில் இடம் பிடித்தவர்தான் ராஜ கண்ணப்பன. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து தேர்வான அவருக்கு பொதுப்பணித் துறை, மின் துறை, நெடுஞ்சாலைத் துறை என மூன்று முக்கிய ‘வளம் கொழிக்கும்’ இலாகாக்களை வாரி வழங்கினார் ஜெயலலிதா. இதைப் பார்த்து சீனியர் அதிமுகவினர் அத்தனை பேரும் என்று வாய் பிளந்தனர். அந்த அளவுக்கு அதிமுகவில் பவர்ஃபுல் அமைச்சராக தன் அரசியல் இன்னிங்ஸை தொடங்கியவர்தான் ராஜ கண்ணப்பன்.

1996-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா தொடங்கி அதிமுக அமைச்சர்கள் மீது வரிசையாக ஊழல் வழக்குகள் பதிவானபோது ராஜ கண்ணப்பனும் அதற்குத் தப்பவில்லை. ஊழல் வழக்கில் சிக்கினாலும் ஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவிலிருந்து விலகி ‘மக்கள் தமிழ் தேசம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் ராஜ கண்ணப்பன். யாதவ சமுதாயத்தின் பின்னணியில் இந்தக் கட்சியைத் தொடங்கிய அவர், 2000-ல் சென்னையில் பெருங்கூட்டத்தைத் திரட்டி நடத்திய மாநாட்டைக் கண்டு திமுக, அதிமுக கட்சிகளே மிரண்டு போயின. செலவு செய்ய சற்றும் அஞ்சாத கண்ணப்பனைக் கண்டு அன்றைய நாளில் ஜெயலலிதாவே ‘ஜெர்க்’ ஆனதாக சொல்வோரும் உண்டு.

திமுக - அதிமுக ஜம்ப்

2001 சட்டப்பேரவைத் தேர்தலில் சாதி கூட்டணியை ஏற்படுத்திய கருணாநிதி, ராஜ கண்ணப்பனையும் திமுக அணிக்குள் இழுத்துப்போட்டு அவர் கட்சிக்கு 6 தொகுதிகளை வழங்கினார். ஆனால், அந்தத் தேர்தலில் திமுகவும் வெல்லவில்லை. ராஜ கண்ணப்பனும் வெற்றிபெறவில்லை. தொடர்ந்து தனித்து செயல்பட்டு வந்த கண்ணப்பன், 2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ‘மக்கள் தமிழ் தேசம்’ கட்சியை திமுகவில் கரைத்துவிட்டு இணைந்தார். 2006-ல் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்ட ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றார். கருணாநிதி அமைச்சரவையில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜ கண்ணப்பனின் யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த கே.ஆர்.பெரியகருப்பனை அமைச்சராக்கினார் கருணாநிதி.

ஜெயலலிதாவுக்கே தண்ணீர் காட்டியவர் என்பதால், எச்சரிக்கை உணர்வுடன் ராஜ கண்ணப்பனை கருணாநிதி கையாண்டார் என்று அதற்கு காரணங்களைச் சொன்னார்கள் உடன்பிறப்புகள். அமைச்சர் பதவி கிடைக்காததால் வெறுத்துப்போன ராஜ கண்ணப்பன், திமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவுக்கே திரும்பினார். 2009-ல் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து ராஜ கண்ணப்பனை மோதவிட்டார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் சொற்ப ஓட்டுகளில் தோற்று சீமான் சிதம்பரத்தையே மிரளவைத்தவர் ராஜ கண்ணப்பன். (அத்தோடு தேர்தல் அரசியலுக்கே முழுக்குப் போட்டார் சிதம்பரம் என்பது வேறு கதை)

மீண்டும் திமுக

மீண்டும் 2011-ல் பெரியகருப்பனிடம் தோற்ற ராஜ கண்ணப்பனுக்கு 2016- தேர்தலில் தேர்தல் பணிக்குழுவில் இடமளித்தார் ஜெயலலிதா. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஜெ. தீபா வீட்டு வாசலுக்கும் போகத் துணிந்த ராஜ கண்ணப்பன் பிறகு ஓபிஎஸ் அணியிலும், அதன்பிறகு ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸோடு சேர்ந்தும் பயணித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியைப் பாஜகவுக்கு வழங்கியதால், அதிருப்தி கொண்டு திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். பிறகு, 2020-ல் முறைப்படி திமுகவிலும் இணைந்தார். இதுதான் ராஜ கண்ணப்பனின் சுருக்கமான அரசியல் டைரி.

இந்த முறை திமுகவில் ராஜ கண்ணப்பன் சேர்ந்தபோதே, 2006-ல் நடந்தது போல மீண்டும் சொதப்பிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ராஜ கண்ணப்பனை திமுகவும், அதிமுகவும் மாறிமாறி அரவணைத்துக்கொள்ள, அவர் ஒரு சமுதாய தலைவராகவும் தென் மாவட்டங்களில் பார்க்கப்படுவதே காரணம். மேலும், 1991-96-க்கு பிறகு அமைச்சர் பதவியை ராஜ கண்ணப்பன் அடையாவிட்டாலும்கூட, பணத்தைத் தண்ணீராய் செலவு செய்வதில் அவர் சுணக்கமே காட்டியதில்லை. அந்த அளவுக்கு பசையுள்ளவர் என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

இம்முறை, சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி, வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவி என்ற மூன்று திட்டங்களோடுதான் திமுகவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார் ராஜ கண்ணப்பன். இதற்கான ‘ஆக்கபூர்வ’ பேச்சுவார்த்தைகள் அயல்தேசத்திலேயே முடிந்துவிட்டன என்ற பேச்சுகள் அறிவாலயத்தில் வலுவாக அடிப்பட்டன.

சுற்றத் தொடங்கிய சர்ச்சை

சிவகங்கையில் நின்றால், அமைச்சர் பதவிக்கு பெரியகருப்பனும் போட்டியாக வருவார் என்பதால், ராமநாதபுரத்தில் முதுகுளத்தூர் தொகுதியை வாங்கிக்கொண்டு, அந்த மாவட்டத்தில் கரை ஒதுங்கினார் ராஜ கண்ணப்பன். தேர்தலுக்கு முன்பு பரவலாக பேச்சு அடிபட்டது போலவே திமுக அமைச்சரவையில் பசையுள்ள போக்குவரத்துத் துறைக்கும் அமைச்சரானார். திமுகவில் பழம் தின்று கொட்டைப் போட்டவர்கள்கூட சத்திலாத இலாகாவில் உட்கார வைக்கப்பட்டபோது, ராஜ கண்ணப்பன் போன்றவர் களுக்கு சத்தான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது திமுகவுக்குள்ளேயே சலசலப்பை உண்டாக்கியது.

அமைச்சரான பிறகு, விசிக தலைவர் திருமாவளவனை சாதாரண பிளாஸ்டிக் சேரில் உட்கார வைத்தது, உதவியாளர்களை அடித்ததாக எழுந்த சர்ச்சை போன்றவை ராஜ கண்ணப்பனை ‘லைம் லைட்’டுக்குள் கொண்டு வந்தன. அதையெல்லாம் தாண்டி, போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்குத் தீபாவளி இனிப்புகள் வாங்க தனியார் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் திருத்தப்பட்ட விதிமுறைகள் சர்ச்சையானது ராஜ கண்ணப்பனுக்கு முதல் சறுக்கலாக அமைந்தது. அரசு நிறுவனமான ஆவினில்தான் இனிப்பு வாங்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் ஆர்டர் போடும் அளவுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினே இதில் தலையிடவும் நேர்ந்தது.

அடுத்த சர்ச்சை

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றிருந்த வேளையில்தான், தேசிய நெடுஞ்சாலையில் சைவ உணவு மோட்டல்களில் மட்டுமே அரசுப் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவும் போக்குவரத்துத் துறை வெளியிட்டு, அது சர்ச்சையாக சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. அந்தச் சர்ச்சை ஓய்வதற்குள், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக ராஜ கண்ணப்பன் மீது புகார் வந்ததும், உடனடியாக நடவடிக்கை பாய்ந்து, இலாகா மாற்றப்பட்டது. மார்ச் 29 அதிகாலையில்தான் முதல்வர் துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நிலையில், அன்று மாலையே ராஜ கண்ணப்பனை இலாகா மாற்றும் அறிவிப்பு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியானது.

ராஜகண்ணப்பனுக்கு செக்

ஆனால், இதற்கான முடிவுகள் துபாய் பயணத்திலேயே எடுக்கப்பட்டதாகவும், அதற்கு வேறு சில காரணங்களையும் சொல்கிறார்கள். இதுதொடர்பாக கோட்டை மற்றும் அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தோம். “சாதியைச் சொல்லி திட்டியதால் ராஜ கண்ணப்பன் இலாகா மாற்றம் என்ற கிரெடிட்டை திமுக அரசு எடுத்துக்கொண்டது. ஆனால், உண்மை அதுவல்ல. கடந்த மார்ச் 15 அன்று தலைமைச் செயகலத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எழிலகத்தில் உள்ள போக்குவரத்து துணை ஆணையாளர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டது. போக்குவரத்து துறையில் பல நிலைகளிலும் பதவி உயர்வுக்காக வசூலிக்கப்பட்ட லஞ்சப் பணம்தான் அது. அரசு அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டே உதவியாளர்களே பணத்தை எண்ணி கட்டுப்போட்டு வைக்கும் அளவுக்கு இதைச் செய்திருக்கிறார்கள்.

ராஜ கண்ணப்பனைச் சுற்றியுள்ளவர்கள் போக்குவரத்துத் துறையில் அடித்த கமிஷன், மாமூல் போன்றவை எகிறிவிட்டது. இதுதொடர்பாக அமைச்சர் மீது தொடர்ந்து மேலிடத்துக்கு புகார்கள் சென்றன. வழக்கமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்துவது வழக்கம். ஆனால், தலைநகரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியாற்றும் எழிலக வளாகத்திலேயே தைரியமாக நடைபெற்றுவந்த இந்த கமிஷன் காரியங்களை கையும் களவுமாகப் பிடிக்க மேலிட வழிகாட்டுதலில்தான் சோதனைகள் நடைபெற்றன.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை வளையத்தில் சிக்கியவர்கள் அமைச்சரையும், அவரைச் சுற்றியுள்ளவர்களையும் கைகாட்டியிருக்கின்றனர். எனவே, பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு ராஜ கண்ணப்பனை கட்டம் கட்ட மேலிடத்தில் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குள் சாதி பெயரை சொல்லி திட்டிய சர்ச்சை வந்ததால், முன்கூட்டியே அதைக் கச்சிதமாக திமுக மேலிடம் பயன்படுத்திக்கொண்டது” என்கின்றன கோட்டை மற்றும் அறிவாலய வட்டாரங்கள்.

எச்சரிக்கை மணி

திமுக 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இல்லாமல் இருந்தது. தற்போது ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் கடந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அரசு மீது ஸ்டாலின் முன் வைத்த ‘கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன்’ புகார் சில திமுக அமைச்சர்கள் மீதும் எழத் தொடங்கியிருக்கின்றன. அதில், முதல் பலியாகச் சிக்கியவர் ராஜகண்ணப்பன். அதனால், பசையுள்ள இலாகாவிலிருந்து டம்மியான துறைக்கு அவர் மாற்றப்பட்டிருக்கிறார். தறிகெட்டுச் செல்லும் அமைச்சர்களுக்கு ஸ்டாலின் அடித்துள்ள எச்சரிக்கை மணியாகவே இது பார்க்கப்படுகிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in