ஓபிஎஸ் வீழ்ந்த காரணம் இதுதான்... ஆர்.பி.உதயகுமார் பேட்டி

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் வீழ்ந்ததற்கான காரணமாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்திருக்கும் கருத்துகள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில் “அதிமுக மாபெரும் மக்கள் இயக்கம். முப்பது ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு தாயில்லாத பிள்ளையாக நாங்கள் இருந்தோம். அந்த இடத்தை நிரப்பும்வகையில் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியைத் தந்தார். இப்போது அதிமுகவுக்கு இருக்கும் பின்னடைவுக்கு கூட்டுத்தலைமைதான் காரணம். ஒரு வேட்பாளர் பட்டியலையே கடைசி நேரத்தில்தான் வெளியிடும் சூழல் இதனாலேயே ஏற்பட்டது.

மக்கள் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். கூட்டுத்தலைமை வேண்டாம். ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்பதே 95 சதவீத தொண்டர்களின் கருத்தாக உள்ளது. எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமைக்கு பொருத்தமானவர் என்பதே தொண்டர்களின் முடிவு. எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவில் பின்வாங்க மாட்டார். பன்னீர் செல்வம் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அவர் விழுந்ததற்குக் காரணம் தொண்டர்களைக் கண்டுகொள்ளாததுதான், அவர்களைக் கைவிட்டுவிட்டார்.

ஓ.பி.எஸ்க்கு குடும்ப நலனே முக்கியம் என தொண்டர்கள் பேசிக்கொள்கிறார்கள். அதிமுக தொண்டனுக்கு திமுக எதிர்ப்பு ரத்தத்தில் ஊறிய விசயம். ஆனால் சட்டசபையில் பராசக்தி வசனத்தை தலையணையில் வைத்து படிப்பேன் எனப் பேசியவர் ஓ.பி.எஸ். அவரது மகன் ரவீந்திர நாத் எம்.பி முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதோடு, அவர் சிறப்பாக செயல்படுவதாகவும் சான்றிதழ் கூறுகிறார். தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ் மீண்டும் அதிமுகவில் சேரும்போது ஜெயலலிதா மரணத்திற்கு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும், சசிகலா, மற்றும் அவரது குடும்பத்தினரைக் கட்சியில் சேர்க்கக் கூடாது எனவும் சொன்னார்.

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

அதை ஏற்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இப்போது அதிலிருந்து விலகி டிடிவி தினகரனுடன் எதற்கு ரகசியம் பேசுகிறார். பொதுக்குழு கூடும் முன்பே ஓ.பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். பொதுக்குழுவில் ஏற்பட்ட தொண்டர்களின் மனக்குமுறலை வைத்துக்கொண்டு ஆதாயம் பெறப் பார்கிறார் ஓ.பி.எஸ். பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை ஏற்றிருந்தால் அனைவர் மனதிலும் அவர் உயர்ந்திருப்பார். ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டவில்லை என்பதால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அதிமுகவை எதிர்த்தவர்கள் வீழ்ந்திருக்கிறார்களே தவிர, வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.”என்றார் அவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in